கல்வி

“மாறிவரும் உலகில் சவால்களை எதிர்கொள்ளும் வெற்றிகரமான மாணவர்களை உருவாக்குவோம். “

இவ்வாறு பல எதிர் நோக்குகளை குறிக்கோளாக கொண்டு பல பாடசாலைகள் இயங்கிக்கொண்டிருக்கிறது. பாடசாலை என்றதும் கடந்த கால பள்ளிக்கூடமும் பள்ளிக்கல்வியும் தான் ஞாபகத்தில் எழுகிறது. கடந்த காலத்தை நினைக்கும் போது மனதில் ஒருவித கவலை ஏற்பட்டாலும் கல்வியின் தற்போதைய வளர்ச்சியினை பார்க்கும் போது மனம் மகிழ்ச்சியடைகிறது. கடந்த கால முன்னோர்கள் கல்வியை பெற்றுக்கொண்ட நிலையையும் அவர்களின் பள்ளிக்கூடத்தின் அமைப்பையும் நினைக்கும் போது வியக்க வைக்கிறது.

மனிதனது இனம் உருவாகியதில் இருந்து கி.மு ஆறாம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் கல்வி எனப்படுவது பெளத்த விகாரைகளையும், துறவி மடங்களையும் ஆக்கிரமித்து இருந்தது. அக் காலத்திலே கல்வி, கற்றல், கற்பித்தல் போன்றவை சமூகத்தில் உயர் அந்தஸ்தத்தில் இருக்கும் துறவிகளுக்கும், பிக்குகளுக்கும் போத்திக்கப்பட்டன. மேலதிகமாக வசதி படைத்த செல்வாக்கு உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது. பெரும்பாலும் மதம் சார்ந்த கல்வியோடு உலோக வேலை, மர வேலை, நெசவு, கட்டடக் கலை, சிற்பக்கலை போன்ற விடையங்களே கற்றுக்கொடுக்கப்பட்டது. அந்தக்காலகட்டத்தில் சமூகத்தில் வாழ்ந்த ஏனைய மக்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. அவர்கள் பெரும்பாலும் கல்வி அறிவு அற்ற சாதாரண மக்களாகவே வாழ்ந்தனர். காலணிய ஆட்சி இலங்கையை ஆட்சி கொள்ளும் வரை இலங்கையின் கல்வி முறை இவ்வாறே இருந்தது.

16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் வருகையின் பின்னர் இலங்கை மக்களுக்கு கல்வியை பெற்றுக்கொள்ள வித்தியாசமான வாய்ப்பு கிட்டியது என்பதே உண்மை. போர்த்துக்கேயர் உரோமன் கத்தோலிக்க மதத்தை பரப்புவதனை நோக்காக கொண்டு ஆரம்பித்த போர்த்துக்கேய மிஷனரிகள் பின்னர் ஒல்லாந்தரின் வருகையின் போது கிறிஸ்தவ ஆரம்ப நிலை பாடசாலைகள் தோற்றம் பெற்றது. ஒரு நூற்றாண்டு காலம் நிலைத்து நின்ற இப் பாடசாலைகள் 18 ஆம் நூற்றாண்டு ஆங்கிலேயரால் ஆங்கிலேய மொழி கற்கைகளை வழங்கியது. இவ்வாறாக ஐரோப்பியர்கள் தங்களது சமயத்தையும், மொழியையும் கற்றுக்கொடுத்தார்கள். அக் காலத்திலேயே வாழ்ந்த முன்னோர்களும் தங்களது மொழியையும் , சமயத்தையும் தாங்களும் வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் இலக்கண வினாவிடை, இலங்கை பூமி சாஸ்திரம், சைவ வினாவிடை போன்ற பாட நூல்களை வெளியிட்டார்கள்.

இக் காலத்திலேயே வாழ்ந்த ஆறுமுக நாவலர் என்பவர் தனது பணிகளுள் கல்விப் பணியை முக்கியமானதாக எடுத்துக்கொண்டு ஆங்கிலேய கல்வி முறைக்கு நிகராக மாணவர்களுக்கு தமிழ்க் கல்வியை புகட்டும் நோக்கில் பாடசாலைகளை நிறுவி தனது தமிழ்ப் பணியை முன்னெடுத்தார். இவர் நிறுவிய பாடசாலைகளில் “வண்ணார் பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலை” என்பது சிறப்பாக குறிப்பிடப்படுகிறது.

இதன் பின்பு கல்வி முறையில் சிறிது சிறிதாக மாற்றங்கள் ஏற்பட்டு 1942 இல் இலங்கையில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அரச பாடசாலைகள் அனைத்திலும் தேசிய மொழி மூலம் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்கு பின்னான காலப்பகுதியில் 60% ஆன பாடசாலைகள் அரசினாலேயே இயக்கப்பட்டன. இதன் பின்பு 1980 களில் இலங்கையில் முதன்முதலாக சர்வதேசப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறாக இலங்கைத் தமிழ்க் கல்வி மேம்பாடானதான நிலையில் வளர்ச்சியடைந்தது.

கல்வியின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் உணர்ந்த இலங்கை மக்கள் அதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என நன்கு அறிந்து தாங்களாகவே முயற்சிக்கின்றார்கள். கல்வியைப்பற்றி பேசும் போது கல்வி கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற வாக்கிற்கு இணங்க கல்வி கற்றவன் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப்படுகிறான். இதற்குக் காரணம் அவன் கற்ற கல்வி ஆகும். கற்றவனுக்கு தனது நாடும் தனது ஊருமே அல்லாமலும் எந்த நாடும் ஊரும் டன்னுடையதாகும். இப்படி கல்வி கற்றவனின் சிறப்பு இருக்க ஒருவன் தான் மரணிக்கும் வரை கல்வி கற்காமல் தனது காலத்தை கழிப்பது மிகவும் சிரமமானதாகும். இதனையே திருவள்ளுவர் மிகவும் அழகாக வர்ணித்துள்ளார்.

“யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன் சாந்துணையும் கல்லாதவாறு”

 என்று குறிப்பிடுகிறார்.

மேலும் “உலகையே மாற்றக்கூடிய ஓர் ஆயுதம் உண்டு என்றால் அந்த ஆயுதத்திற்கு பெயர் தான் கல்வி” என்கிறார் நெல்சன் மண்டேலா. “படிக்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே மேல் என்கிறார்” பிளேட்டோ. “இளமையில் கல்” என்கிறது ஆத்திசூடி, “அறியாமை என்பது வெட்கம் தான் அதிலும் அறிய முயலாமல் இருப்பது என்பது அதிலும் வெட்கப்பட வேண்டியது” என்கிறார் பெஞ்சமின் பிறாங்ளின். “பெற்ற பிள்ளைகள் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது” என்கிறார் மகாத்மா காந்தி. இவ்வாறு கல்வி பற்றியும் அதன் சிறப்புப் பற்றியும் கூறுகிறார்கள்.

ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனை செயல் வடிவில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் அவன் கற்ற கல்வியின் பயன் அவனுக்கு கிடைக்கும். இல்லாவிடின் அவன் கற்ற கல்வியின் பயன் ஒன்றும் இல்லாமல் போய்விடும். இதனையும் திருவள்ளுவர் தனது குறளின் கல்வி என்ற அதிகாரத்தில் தெளிவாக குறிப்பிடுகிறார்.

“கற்க கசடற கற்பவை நிற்க அதற்குத் தக”

என்று குறிப்பிடுவதில் இருந்து தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. எண் என்று சொல்லப்படுவதும், எழுத்து என்று சொல்லப்படுவதும் இவை இரண்டினையும் அறிந்தோர் சிறப்புமிக்க மக்களின் உயிர்களிற்கு கண் என்று சொல்லப்படுவர். இந்த அளவிற்கு கல்வியின் சிறப்பு எடுத்துரைக்கப்படுகிறது. கற்றவரின் சிறப்புப் பற்றிக் குறிப்பிடும் போது ஒருவரின்  முகத்தில் உள்ள கண் ஆனது கற்றவருக்கு உரிய அடையாளம் என்று சொல்லப்படுகிறது. அதே கண் இல்லாதவருக்கு முகத்தில் இரண்டு புண் இருப்பதாக குறிப்பிடுகிறது. இதன் மூலம் கல்வியின் சிறப்பும், கற்றவரின் சிறப்பும் கூறப்படுகின்றது.இவ்வாறான கல்வியின் சிறப்பினை அறிந்த இலங்கை மக்கள் தாங்கள் தங்களது கல்வி நிலையை அதிகரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நாங்கள் பெறவேண்டிய கல்வியை முழுமையாகவும், தெளிவாகவும் பெற்றுக்கொள்வதற்கும் அவர்களின் வாழ்வில் ஒளி விளக்கை ஏற்றி வைப்பதற்கும் ஓர் நல்ல ஆசிரியர் கிடைக்கப்பெற வேண்டும். இது யாவரும் அறிந்த உண்மை. “எந்த நாடும் அந் நாட்டின் ஆசிரியரின் தகுதிக்கும் மேலாக உயர்ந்துவிட முடியாது.” எனவே ஒரு நாட்டின் உயர்வும் தாழ்வும் அதன் ஆசிரியர்களிடமே விடப்பட்டுள்ளது. ஆசிரியர் உயர அவர் தம் நோக்குயர,போக்குயர,வாக்குயர நாடே உயரும்.ஆசிரியர்களைக் கல்வியால், பயிற்சியால், திறனால், தொழில் அறத்தால் உயர்த்தியே எந் நாடும் உயர முடியும். இலங்கை நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களிற்குள்ளே தான் தீர்மானிக்கப்படுகிறது. வளர்ந்துவரும் அறிவியல் தொழில்னுட்ப உலகில் மக்களின் முன்னேற்றம், பாதுகாப்பு, நல் வாழ்வு ஆகியவற்றை நிர்ணயிப்பது கல்வி ஆகும். இக் கல்வி தரமானதாகவும், நாட்டு வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைய முகவர்களாக செயற்படுபவர்கள் ஆசிரியர்கள் ஆவர்.

வருங்கால நற்குடிமக்களை உருவாக்கும் தலையாய பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. மாணவர்களிற்கு பாடப்பொருளை கற்பிப்பதோடு , மாணவரது உள் உணர்வை அறிதல், ஆளுமையை வளர்த்தல், தகவல்களை சேகரித்தல், தொடர்புபடுத்திப் பார்த்தல், கற்றதைப் பயன்படுத்துதல், சுயசிந்தை ஆக்கத்திறனை வளர்த்தல், மாணவர்களுடன் சுமூகமாகப் பழகி ஆக்கபூர்வமான உறவுகளைக் கொண்டிருத்தல் என்பன ஆசிரியர்களின் பொறுப்பாகும். நற் சிந்தனைகளையும் ஆர்வத்தையும் வளர்த்து மாணவர்களிடையே  நாட்டுப் பற்று பரிணாமிக்குமாறு செய்வதில் ஆசிரியர் உறுதுணையாக நிற்றல் வேண்டும். பள்ளிக்கும் சமூகத்திற்கும் ஆசிரியர் செய்ய வேண்டிய கடமைகளை முழுமையாகப் பட்டியல் இட்டுக் கூற முடியாது. ஆசிரியரின் முக்கியத்துவமும் செல்வாக்கும் பயனும் வழிகாட்டலும் அங்கு நிறைவு பெறுகிறது என எவரும் வரையறுத்துக் கூற இயலாது. ஆசிரியர்களின் பணி பன்முகப்பரிணாமங்களாக உள்ளது.

ஆசிரியர்கள் மாணவர்களுடன் யாதொரு தடையும் இன்றி கற்றவற்றைப்பற்றி தமக்குள் மனம் விட்டு விவாதிக்க வேண்டும். மாணவர்களை சுதந்திரமாக கேள்வி கேட்கத் தூண்ட வேண்டும்.ஆசிரியர் அவற்றுக்கெல்லாம் தக்க விடையளித்து மாணவர்களின் ஐயத்தை போக்க வேண்டும். கற்பிக்கையில் மக்கள் வாழ்க்கையிலிருந்தே பல செய்திகளை எடுத்து கூறி விளக்கமளிக்க வேண்டும். மாணவர்களினது அறிவு வேட்கையினைத் தூண்டி வடிகாலாக்கி ஆராய்ச்சி மனப்பாங்கை வளர்க்க வேண்டும். ஆசிரியர்கள் தன் மாணவனின் குடும்ப சூழ் நிலை பற்றி அறிந்திருக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களுடன் மாணவர்களது  வளர்ச்சி,முயற்சி பற்றி கலந்தாலோசித்து மனித நேயத்தை வளம்படுத்துபவராக திகழ வேண்டும். இவ்வாறாக மாணவர்களின் கல்வி மட்டில் ஆசிரியர்களின் பங்களிப்பு காணப்படுகின்றது.

கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தங்களது கல்வி பாடசாலை மட்டில் கடமைகளும் பொறுப்புக்களும்காணப்படுகின்றது. மாணவர்கள் என்ற வகையில் நன்றாகப் படிக்க வேண்டும். அத்துடன் அவர் நற்பண்புடன் செயற்பட வேண்டும் என்று இவர்களை குறித்து பலரும் எதிர்பார்க்கின்றனர். இக் கடமைகளை சரியாக செய்யத் தவறும் போது அவ்  மாணவரது மேல் பாடசாலையும் சமூகமும் தனது பார்வையை மாற்றுகின்றது. எனவே மாணவர்கள் கடமை உணர்வுடன் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் அவனது சமூகமும் நாடும் தங்களது இலக்கை அடைந்து கொள்ள முடியும்.

கல்வி என்ற வார்த்தை இன்றைய காலகட்டத்தில் இலங்கையரைப் பொறுத்த வரையில் ஒரு முக்கியமான அம்சமாகவே காணப்படுகின்றது. ஆரம்ப நிலை தொடங்கி பல்கலைக்கழகம் வரை ஏழை, பணக்காரர், சாதி, மதம், இனம், மொழி போன்ற எவ்வித பாகுபாடின்றி எல்லோருக்கும் பொதுவானதாகவும் அனைவராலும் ஆர்வத்துடன் போட்டி மனப்பான்மையுடனும் முறையான கல்வித் திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பிட்ட அளவு வாய்ப்புக்களை பாரியளவு மக்களுக்கு வழங்குவதில் இலங்கை போன்றதொரு நாடு எதிர் நோக்கும்  சமூக, பொருளாதார சவால்களின் விளைவாக மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது வாய்ப்புக்களை தக்க வைத்து கொள்ள போராடும் நிலையை நாமறிவோம். ஏழை விவசாயி ஒருவனின் பிள்ளை கூட தனது திறமையால் கல்வியில் உயர் மட்டங்களை அடைகின்றது. இதனால் அச் சமூகமும் வீடும் மகிழ்வடைகிறது. இவ்வாறாக பாகுபாடு இன்றி திறமையால் உயர்ந்த வாழ்வை நோக்கி கல்வி பயணிக்க வைக்கிறது.

பிற துறைகளில் பாரிய வளர்ச்சி ஏற்படுவது போல் கல்வி என்ற புனித துறையில் அளப்பெரிய வளர்ச்சி ஏற்படுவதை நாம் காண்கிறோம். ஓலைகளில் கல்வி கற்ற காலம் போஇ தற்போது கணினிகளில் பதிவு செய்தும் தெரியாதவற்றை அதன் மூலம் அறிந்துகொள்ளும் அளவிற்கு கல்வித்துறை வளர்ச்சியடைந்து உள்ளது. கல்வி கற்றவர் மரணித்துவிடுவர் ஆனால் அவர் கற்ற , கற்பித்த கல்வி இந்த உலகம் அழியும் வரை இருந்தே ஆகும். இதனையே கல்விக்காக உயிர் கொடுத்தவர்கள் மரணிப்பதில்லை என கூறுவர். இதற்கு சிறந்த உதாரணமாக 1400 வருடங்களுக்கு முன்னர் கற்பித்த புனித இஸ்லாம் மார்க்கம் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதனால் போதித்தவர் இன்று மரணித்து விட்டார். அவர் கற்பித்தவை இன்றும் நம் மத்தியில் காணப்படுவதைக் காணலாம்.

“தான் இன்புறுவது உலகில் பிறர் காமுறுவர் கற்றறிந்தவர்.”

ஒருவன் தான் கற்ற கல்வியின் இன்பத்தை உணர்ந்தவன் ஆயின் அவன் மீண்டும் கற்பதையே விரும்புவான். இது கல்வியின் பண்பாக கருதப்படுகிறது. கல்வி கற்றவரிடம் ஒழுக்கம், நீதி, நேர்மை இவை அனைத்தும் ஒருங்கே அமைந்து காணப்படும். எனவே கல்வியானது மனிதனது முக்கிய தேவையாக இருக்கிறது. எந்தவொரு சமூகமும் இக் காலத்தில் கல்வி இல்லாமல் இருப்பது இக் காலத்தை பொறுத்தவரையில் மிகவும் தாழ்மையும், இழிவானதாகவும் கருதப்படும். இவ்வாறு பார்க்கும் போது கல்வியின் முக்கியத்துவத்தை அறிய முடிகின்றது. ஒருவன் கல்வி கற்றால் எவ்வாறு சமூகத்தில் மதிக்கப்படுகிறான் என்று அறியமுடிகிறது.

இதனாலேயே நம் முன்னோர்கள் கல்வியின் நோக்கத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் சிந்தித்து ஐரோப்பியர் காலத்தில் தமிழுக்கும் எமது நாட்டிற்கும் பயனுள்ள வகையில் பாடசாலைகளை அமைத்து கல்விகளை புகட்டியுள்ளனர். தற்போது மாணவர்களின் கல்வியின் அபரிவித வளர்ச்சி காரணமாக பிற மொழிகளிலும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது. கல்வியைக்கற்று சமூகத்தில் சிறந்த பிரயையாக உருவாகுவோம்.

“கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு…..”