பாடசாலை

“ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது”

கல்விச் சேவை என்பது உலகில் மிகச்சிறந்த சேவையாகும். ஒரு குழந்தையை நல்வழிப்படுத்துபவர்கள் இரண்டு பேர். அவர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள். குழந்தைகள் பெற்றோர்களைவிடபாடசாலையில் தான் தன் அன்றாட வாழ்வில் அதிகம் செலவிடுகின்றனர் பல எதிர் நோக்குகளை குறிக்கோளாக கொண்டு பல பாடசாலைகள் இயங்கிக்கொண்டிருக்கிறது. பாடசாலை என்றதும் கடந்த கால பள்ளிக்கூடமும் பள்ளிக்கல்வியும் தான் ஞாபகத்தில் எழுகிறது. கடந்த காலத்தை நினைக்கும் போது மனதில் ஒருவித கவலை ஏற்பட்டாலும் கல்வியின் தற்போதைய வளர்ச்சியினை பார்க்கும் போது மனம் மகிழ்ச்சியடைகிறது. கடந்த கால முன்னோர்கள் கல்வியை பெற்றுக்கொண்ட நிலையையும் அவர்களின் பள்ளிக்கூடத்தின் அமைப்பையும் நினைக்கும் போது வியக்க வைக்கிறது.

மனிதனது இனம் உருவாகியதில் இருந்து கி.மு ஆறாம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் கல்வி எனப்படுவது பெளத்த விகாரைகளையும், துறவி மடங்களையும் ஆக்கிரமித்து இருந்தது. அக் காலத்திலே கல்வி, கற்றல், கற்பித்தல் போன்றவை சமூகத்தில் உயர் அந்தஸ்தத்தில் இருக்கும் துறவிகளுக்கும், பிக்குகளுக்கும் போதிக்கப்பட்டன. மேலதிகமாக வசதி படைத்த செல்வாக்கு உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது. பெரும்பாலும் மதம் சார்ந்த கல்வியோடு உலோக வேலை, மர வேலை, நெசவு, கட்டடக் கலை, சிற்பக்கலை போன்ற விடையங்களே கற்றுக்கொடுக்கப்பட்டது. அந்தக்காலகட்டத்தில் சமூகத்தில் வாழ்ந்த ஏனைய மக்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. அவர்கள் பெரும்பாலும் கல்வி அறிவு அற்ற சாதாரண மக்களாகவே வாழ்ந்தனர். காலணிய ஆட்சி இலங்கையை ஆட்கொள்ளும் வரை இலங்கையின் கல்வி முறை இவ்வாறே இருந்தது.

16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் வருகையின் பின்னர் இலங்கை மக்களுக்கு கல்வியை பெற்றுக்கொள்ள வித்தியாசமான வாய்ப்பு கிட்டியது என்பதே உண்மை. போர்த்துக்கேயர் உரோமன் கத்தோலிக்க மதத்தை பரப்புவதனை நோக்காக கொண்டு ஆரம்பித்த போர்த்துக்கேய மிஷனரிகள் பின்னர் ஒல்லாந்தரின் வருகையின் போது கிறிஸ்தவ ஆரம்ப நிலை பாடசாலைகள் தோற்றம் பெற்றது. ஒரு நூற்றாண்டு காலம் நிலைத்து நின்ற இப் பாடசாலைகள் 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரால் ஆங்கிலேய மொழி கற்கைகளை வழங்கியது. இவ்வாறாக ஐரோப்பியர்கள் தங்களது சமயத்தையும், மொழியையும் கற்றுக்கொடுத்தார்கள். அக் காலத்திலே வாழ்ந்த முன்னோர்களும் தங்களது மொழியையும், சமயத்தையும் தாங்களும் வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் இலக்கண வினாவிடை, இலங்கை பூமி சாஸ்திரம், சைவ வினாவிடை போன்ற பாட நூல்களை வெளியிட்டார்கள்.

இக் காலத்திலேயே வாழ்ந்த ஆறுமுக நாவலர் என்பவர் தனது பணிகளுள் கல்விப் பணியை முக்கியமானதாக எடுத்துக்கொண்டு ஆங்கிலேய கல்வி முறைக்கு நிகராக மாணவர்களுக்கு தமிழ்க் கல்வியை புகட்டும் நோக்கில் பாடசாலைகளை நிறுவி தனது தமிழ்ப் பணியை முன்னெடுத்தார். இவர் நிறுவிய பாடசாலைகளில் “வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலை” என்பது சிறப்பாக குறிப்பிடப்படுகிறது.இதன் பின்பு கல்வி முறையில் சிறிது சிறிதாக மாற்றங்கள் ஏற்பட்டு 1942 இல் இலங்கையில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அரச பாடசாலைகள் அனைத்திலும் தேசிய மொழி மூலம் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்கு பின்னான காலப்பகுதியில் 60% ஆன பாடசாலைகள் அரசினாலேயே இயக்கப்பட்டன. இதன் பின்பு 1980 களில் இலங்கையில் முதன்முதலாக சர்வதேசப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் இரு முக்கிய பிரிவுகளில் பாடசாலைகள் இயங்குகின்றன. அரசுசார், அரசு சார்பற்ற பாடசாலைகளே அவை. பெரும்பாலும் இப்பாடசாலைகளில் முதல், இரண்டாம் நிலைக் கல்வியே போதிக்கப்படுகின்றது.

அரசு சார்பற்ற பாடசாலைகளும் இருவேறு பிரிவுகளைக் கொண்டியங்குகின்றன. அவையாவன, தனியார் பாடசாலைகள் மற்றும் பன்னாட்டுப் பாடசாலைகள். தனியார் பாடசாலைகள் அரசின் நேரடிக் கண்காணிப்பில் இல்லாதபோதும், அவற்றுக்கான சட்ட திட்டங்கள் கல்வியமைச்சினால் பெறப்பட வேண்டும் என்பது நியதி. பெரும்பான்மை பன்னாட்டுப் பாடசாலைகள் வெளிநாட்டு பாடத்திட்டத்தைப் பின்பற்றுகின்ற போதும், சிறுபான்மை தனியார் பாடசாலைகள் அரச மற்றும் வெளிநாட்டுப் பாடத்திட்டத்தின்படி தமது பாடத்திட்டத்திட்டத்தினை ஒழுங்கமைத்துள்ளன .பாடசாலையானது  தரமான கல்வியுடன்,  கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும். இவ்வாறு பாடசாலைகள் பல பண்புகளை தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது 

படிக்க இயலாத நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு இலவச உணவு, இலவச சீருடை என்பவற்றை வழங்கி பிள்ளைகளின் கல்விக்கு பெரும் ஆதரவினை பாடசாலைகளில் அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது .இதன் மூலம் எவ்வித பாகுபாடுமின்றி பிள்ளைகளால் கல்வியினை நிரந்தரமாக பெற்றுக்கொள்ள முடிகின்றது .இதனால் வறிய பிள்ளைகளின் கல்வி நிலை கூட விருத்தி அடைந்தது தற்போது பல சாதனைகளை செய்து வருகிறார்கள் .கல்வி நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் பிள்ளைகளுக்கு அரசாங்கம் புலைமைப்பரிசில்களையும் வழங்கி வருகிறது. இதன் மூலம் பிள்ளைகளின் எதிர் கால கல்வி நிலைக்கு கூட பெரும் பயனளிக்கிறது .