பல்கலைக்கழகம்

பல்கலைக்கழகம் என்பது உயர் கல்வியை வழங்கும், ஆய்வை மேற்கொள்ளும் ஒரு நிறுவனம். பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பையும் பட்டமேற்படிப்பையும் பல்கலைக்கழங்கள் வழங்குகின்றன.   கல்வி மருத்துவம், சட்டம், பொறியியல், அறிவியல், கலை உட்பட பல துறைகளில் வேலை செய்வதற்கு அடிப்படை  அறிவினை வழங்குவதாக கருதப்படுகிறது. தமிழ்ச் சூழலில் பல்கலைக்கழகம் மேற்குநாட்டினரால் 19 ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. உள்நாட்டு உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி முறைமையின் உயர்தரத்தை உறுதிப்படுத்தலும், அனைத்துலக கல்வித் தரத்திற்கு ஏற்ப உருவாக்குவதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நோக்கம் ஆகும். இலங்கையின் உயர்கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தி அதன் மூலம் தேசிய கல்வி வளத்தை பெருக்குவதும் உயர் கல்வி நிறுவனங்கள் வழியாக தகுதியுள்ள சிறந்த மனித வளத்தை உருவாக்கி ஆராய்ச்சி மற்றும் ஆளணியை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தமது கல்வியாண்டை ஒரே காலப்பகுதியில் ஆரம்பிப்பதுமில்லை, முடிப்பதுமில்லை. ஆரம்பிப்பது எப்போது என்ற சிக்கல் ஒரு புறமிருக்க, நினைவுக்கு எட்டிய காலப்பகுதியில் திட்டமிட்டப்படி ஆரம்பிக்கப்பட்ட கல்வியாண்டு திட்டமிட்ட காலப்பகுதியில் நிறைவு செய்யப்பட்டு பரீட்சைகள் நடத்தப்பட்டு பெறுபேறுகள் வெளிவந்து பட்டமளிப்பு உரிய காலத்தில் இடம்பெற்றதாகவும்  வரலாறில்லை.விரும்பியோ விரும்பாமலோ இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஒரே காலப்பகுதியில் தமது கல்வியாண்டை ஆரம்பித்து நிறைவு செய்யும் முறைமை படிப்படியாகவேணும் அமுல்படுத்தப்பட வேண்டும். இதனை மேற்கொள்ளாமல் பல்கலைக்கழக கல்வியின் தரத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாது. எது நடப்பினும் கல்வியாண்டு மாறாத ஒரு முறை அவசியம். இலங்கையில் நடைபெறும் மிகக்கடினமான ஒரு பரீட்சை என்றால் அது கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை தான் என்பதில் மாற்றுக் கருத்திருக்கமுடியாது. இலட்சக்கணக்கான மாணவர்கள் தோற்றும் பரீட்சையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு சித்திபெற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் 20,000 – 30,000 வரையிலான மாணவர்கள் சமூகத்தின் வடித்தெடுக்கப்பட்ட திறமைசாலிகளாக கருதப்படுகின்றனர். அவ்வாறு கருதுவதிலே தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அவ்வாறு பல்கலைக்கழகங்களுக்கு உள்ளே வருபவர்களுக்காக மூன்று அல்லது நான்கு வருடங்கள் கல்வி கற்கின்றார்கள் .அரச பல்கலைக்கழகங்களுக்குள் நுழைபவர்களுக்கு இலவச ஆங்கில பாடப் பயிற்சிகள் கட்டாயம். அதனைப் பூர்த்தி செய்யாவிட்டால் பட்டம் கிடைக்காது. கணிதம் கற்பதற்கான வாய்ப்புகள் உண்டு, கணினித் தொழில்நுட்பத்திற்காக ஆய்வு கூட வசதிகளுடன் கூடிய பயிற்சிகள் உண்டு.   அது தவிர பாடத்திட்ட புறக்கிருத்தியங்களுக்கான வாய்ப்புகள் ஏராளம். தற்போது அரச பல்கலைக்கழகங்களிலே உண்டு.பல்கலைக்கழக கல்விசார் ஆளணியினர் கற்பித்தல் நுட்பங்கள் பற்றிய பாடநெறியை பூர்த்தி செய்த பின்னரே தொழிலில் நிரந்தரமாகப்படுகின்றனர்.

எனவே பயிற்றப்பட்ட விரிவுரையாளர்களுடன் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்களும் போதியளவு உள்ளனர். பாடத்திட்டங்களும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நெறிப்படுத்தலில் சீரமைக்கப்பட்டு இற்றைப்படுத்தப்பட்டு தொழில்வாய்ப்பை பெறும் நோக்கில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன பல்கலைக்கழக சூழலை கற்றல் மற்றும் கற்பித்தங்களுக்கு உகந்த ஒன்றாக மாற்றும் அதேவேளை அநாவசிய ‘தமாஷா’ க்களை கட்டுப்படுத்தும் – தடைசெய்யும் – நடைமுறையினை உயர்கல்வி தரப்பு மேற்கொள்ளவேண்டும். பல்கலைக்கழகம் என்பது பல கலைகளை கற்கும் இடம். அந்தக் கலைகள் எவை என்பதை சரியாக தெரிவு செய்து வழங்கவேண்டியது – நெறிப்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை.