அடுத்த வாரம் பாடசாலை கற்பித்தல் பணிகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்

அடுத்த வாரம் பாடசாலை கற்பித்தல் பணிகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

மாகாண கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள் பிரச்சினை காரணமாக, நாடுமுழுவதுமுள்ள அனைத்து பிரதான நகரங்களிலும் உள்ள பாடசாலைகள் இந்த வாரம் இயங்கவில்லை.

எனினும், இணையவழி கற்பித்தலை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மேல் மாகாணம் உட்பட சகல மாகாணங்களிலும் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோரின் போக்குவரத்துக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் பிரதேச மட்டத்தில் குறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளை நடத்துவதற்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

சில பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு, வலய கல்விப் பணிப்பாளருடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானத்தை மேற்கொள்ள குறித்த பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அதிகாரம் வழங்கியது.

பாடசாலை நடவடிக்;கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் சில மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாவிட்டால் அவர்களுக்கு இணையவழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கல்வி அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில், குறித்த காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்து இன்றைய கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

Comments are closed.