அடுப்புக்கள் வெடிப்பு

நாட்டில் மேலும் இரு இடங்களில் 2 அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் ஹிஜிராபுர பகுதியில் நேற்று (21) இரவு சுமார் 8.10 மணியளவில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்து சிதறியுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும் அடுப்பு முற்றாக சேதமடைந்துள்ளது.

குறித்த வீட்டில் சமைத்து முடித்து விட்டு அடுப்பினை அனைத்து வைத்துவிட்டு அறையில் இருந்த போதே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் குறித்த லிட்ரோ எரிவாயு 16 நாட்களுக்கு முன் ஹட்டன் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்வனவு செய்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மற்றும் கைரேகை அடையாளப்பிரிவு ஆகியன இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம வெஸ்ட் நட்போன் தோட்டத்தில் தனி குடியிருப்பு ஒன்றில் நேற்று (21) காலை எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எரிவாயு சிலிண்டரிலிருந்து எரிவாயு கசிந்துள்ளது. இதனையடுத்து அடுப்பும் வெடித்துள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அடுப்பு முழுமையாக சேதமடைந்துள்ளதுள்ளதுடன் இதில் எவருக்கும் உயிர் ஆபத்தோ காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் டயகம பொலிஸார் மற்றும் நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவு ஆகியன இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments are closed.