ஆகஸ்ட்டில் சமையல் எரிவாயுவுக்கான வரிசைகள் குறைவடையக்கூடும்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதியளவில் நாட்டின் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான வரிசை குறைவடையக் கூடும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் மாத்திரம் 33,000 மெட்ரிக் டன் எரிவாயுயை நாட்டிற்கு இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம், 6, 10, 15, 22 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நாட்டிற்கு தலா 3,500 மெட்ரிக் டன் வீதம் ஐந்து எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.

அத்துடன் எதிர்வரும் ஆறாம் திகதியின் பின்னர், 120,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாள் ஒன்றுக்கு 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாள் ஒன்றுக்கு 40,000 சிறிய ரக சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 4 மாத காலத்திற்கு 100,000 டன் எரிவாயு கொள்வனவு செய்ய அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.