இந்தியர்கள் விசா இன்றி போலந்து வர அந்நாட்டு அரசு அனுமதி

உக்ரைன் மீது ரஷிய படைகள் 4-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதல் நடத்தி உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. இதனால் தொடர்ந்து உக்ரைனில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர் உக்ரைன் மீதான தாக்குதலை கைவிட பல்வேறு  நாடுகள் ரஷியாவை வலியுறுத்து வருகின்றன.

இதனால்  பல்வேறு நாட்டு மக்களும் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.  உக்ரைனில் சிக்கியிருக்கும் சொந்த நாட்டு மக்களை மீட்பதுதான் இந்தியாவுக்கு உடனடி சவாலாக மாறியிருக்கிறது. மாணவர்கள் உள்பட சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாக கடந்த 24-ந்தேதி மத்திய அரசு அறிவித்து இருந்தது.

உக்ரைனில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்பி வரும் மாணவர்கள் மற்றும் குடிமக்களுக்கான தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது.அதன்படி  ருமேனியா, போலந்து மற்றும் உக்ரைனுக்கு அருகேயுள்ள பிற நாடுகளின் வழியே இந்திய குடிமக்களை அழைத்து வர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதற்காக 2 ஏர் இந்தியா விமானங்களும் அனுப்பி வைக்கப்பட்டன.  தொடர்ந்து நேற்று 2 விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.தொடர்ந்து தேவைக்கேற்றபடி விமானங்களை அனுப்பவும் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் விசா இன்றி போலந்து வர அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. உக்ரைன் ,ரஷியா போர் தொடர்ந்து 4வது  நாளாக நடைபெற்று வரும் நிலையில் போலந்து அரசு அனுமதி அளித்துள்ளது.இதனை  இந்தியாவுக்கான போலந்து தூதர் ஆடம் புராகோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்

Comments are closed.