இந்தியா- இங்கிலாந்து இன்று மோதல்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் டாப்-8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் விளையாடுகின்றன. இந்திய அணி சூப்பர்-12 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 24-ந்தேதி சந்திக்கிறது.

அதற்கு முன்பாக இந்திய அணிக்கு இரண்டு பயிற்சி ஆட்டங்களுக்கு (இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் துபாயில் இன்றிரவு (திங்கட்கிழமை) நடக்கிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் சமீபத்தில் இதே மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடினார்கள். அதனால் அங்குள்ள சூழல் அவர்களுக்கு பிரச்சினையாக இருக்காது. ஆனால் மிகச்சரியான லெவன் அணியை அடையாளம் காண இந்த பயிற்சி ஆட்டம் உதவும். தொடக்க ஆட்டக்காரர் வரிசையில் ரோகித் சர்மாவுடன் லோகேஷ் ராகுல் அல்லது இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவர் இறக்கப்படுவர். இருவருமே ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிரடியாக ரன்வேட்டை நடத்தினர். எனவே கவனத்தை ஈர்க்க இருவருமே பயிற்சி போட்டியை மிக தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஐ.பி.எல். போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட பந்து வீசவில்லை. அவர் பந்துவீசும் அளவுக்கு உடல்தகுதியை எட்டிவிட்டாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மோர்கனுக்கு சிக்கல்

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பெரும்பாலான வீரர்கள் ஐ.பி.எல்.-ல் விளையாடவில்லை. அதனால் அவர்கள் பயிற்சி களத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட மோர்கன் ஒரேயடியாக சொதப்பினார். மொத்தம் 11 ஆட்டங்களில் ஒற்றை இலக்கத்தை அவர் தாண்டவில்லை. 20 ஓவர் தொடர் ஒன்றில் இத்தனை ஆட்டங்களுக்கு ஒருவர் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தது இதுவே முதல் முறையாகும்.

மோர்கன் பார்முக்கு திரும்ப வேண்டியது அந்த அணிக்கு அவசியம். மற்றபடி ஜாசன் ராய், சாம் பில்லிங்ஸ், லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி என்று இங்கிலாந்து அணி பேட்டிங்கில் வலுவாக இருப்பதால் பயிற்சி ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்று நம்பலாம்.

வீரர்கள் பட்டியல்

போட்டிக்கான இருஅணி வீரர்கள்வருமாறு:-

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், வருண் சக்ரவர்த்தி, ராகுல் சாஹர், ஷர்துல் தாக்குர், பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், ஹர்திக் பாண்ட்யா.

இங்கிலாந்து: மோர்கன் (கேப்டன்), ஜாசன் ராய், சாம் பில்லிங்ஸ், லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி, டாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், டைமல் மில்ஸ், அடில் ரஷித், மார்க் வுட்.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இன்றைய தினம் மேலும் 3 பயிற்சி ஆட்டங்களும் நடக்கிறது. ஆப்கானிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து-ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும் இன்று மோதுகின்றன.

Comments are closed.