இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் S. ஜெய்ஷங்கர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின்பேரில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்திய வெளிவிவகார அமைச்சர் S. ஜெய்ஷங்கர், இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் தனது விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புகளை முன்னெடுக்கவள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டில் வெளிநாட்டு உயர்மட்ட உயரதிகாரி ஒருவர் நாட்டுக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும் என வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் S. ஜெய்ஷங்கர், இந்த ஆண்டில் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இரு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமையின் அடிப்படையில், உயிர்க்குமிழி பாதுகாப்பு அடிப்படையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.