இன்று இரவு முதல் நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில்
இன்று (16) முதல் நாளாந்தம், இரவு 10 மணி தொடக்கம், அதிகாலை 4 மணிவரை, நாடுமுழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், அத்தியாவசிய சேவைகளுக்கு இந்தத் தீர்மானம் தாக்கம் செலுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள, சில வழிகாட்டல்களை சட்டமாக்கும் வர்த்தமானி அறிவித்தல், இன்று வெளியிடப்படவுள்ளது.
இதேவேளை, நேற்று (15) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பொதுமக்கள் ஒன்றுகூடும் எந்தவொரு நிகழ்விற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாளை (17) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல்வரை, வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இந்தத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உணவகங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கொள்ளளவில், 50 சதவீதத்தை விடவும் அதிகரிக்காத எண்ணிக்கையிலானோருக்கு ஒன்றுகூட முடியும்.
எவ்வாறிருப்பினும், பொது இடங்களில் நடமாடுவதை இயன்றளவு தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை கோருவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.