இலங்கைக்கு வருகை தந்த ருவாண்டா சிறப்பு தூதுக்குழுவினர்: இராணுவத் தளபதியை சந்திப்பு

வட மத்திய மாகாணம் மற்றும் ஏனைய இடங்களில்பயிரிட்ட சோளத் தோட்டங்களில் படைப் புழுக்களின் (சேனா அந்துப்பூச்சி கம்பளிப்பூச்சி) வேகமான தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான விஞ்ஞான நிபுணத்துவத்தை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் நோக்கில், ஜனாதிபதியவர்களின் முயற்சியில் ருவாண்டாவிலிருந்து இலங்கைக்கு வந்த சிறப்பு தூதுக்குழுவினர் இராணுவத்தின் ஒருங்கிணைப்புடன் அவர்களின் இரண்டு நாள் சாத்தியக்கூறுகளை ஆராயும் பணியின் முடிவில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

ஜனாதிபதி ருவாண்டாவின் ஆலோசனையைத் தேடி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்து 72 மணி நேரத்திற்குள் ருவாண்டாவிலிருந்து விஞ்ஞானிகள், விவசாய வல்லுநர்கள் மற்றும் பூச்சி கட்டுப்பாடு வல்லுநர்கள் அடங்கிய தூதுக்குழு, நல்லெண்ணம் மற்றும் நடைமுறையில் உள்ள இருதரப்பு உறவுகளின் அடையாளமாக, சிறப்பு விமானம் மூலம் கடந்த வியாழக்கிழமை (31) கொழும்பை வந்தடைந்தனர். மற்றும் அனுராதபுரத்தில் உள்ள எலயப்பட்டுவவுக்கு களப்பயணம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் விவசாய அமைச்சில் தங்கள் சகாக்களை சந்தித்தனர்.

இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தின் ஏற்பாட்டில் தூதுக்குழுவினர் விவசாய துறைகள் மற்றும் விவசாய சேவைகளைச் சேர்ந்த சில சிரேஷ்ட அரச அதிகாரிகள், இராணுவ பொது பதவி நிலை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரதீப் சில்வா, கொழும்பில் உள்ள விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் இந்திராஜித் கந்தனார்ச்சி ஆகியோருடன் இணைந்து முதலில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, விவசாய அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுமேத பெரேரா, விவசாய பணிப்பாள நாயகம் டொக்டர் டபிள்யு.எம்.டபிள்யு வீரகோண் ஆகியோரை சந்தித்தனர். அங்கு ருவாண்டன் தூதுக்குழுவின் முன் கேள்விக்குரிய அச்சுறுத்தலின் அளவைப் பற்றிய விளக்கக்காட்சிகள் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல், ருவாண்டன் வல்லுநர்கள் சோளத் தோட்டங்கள் பெருமளவில் செய்யப்படுகின்ற தங்கள் நாட்டில் பூச்சியைக் கட்டுப்படுத்துவதில் தங்கள் அனுபவங்களை முன்வைத்தனர்.

தூதுக்குழுவில் பிரிக்கேடியர் ஜெனரல் பிரெட் முசிராகுஹாரார, அலெக்சிஸ் ருசாகரா (ஹொரைசன் குழு சி.ஓ.ஓ), ஜீன் மேரி வியானி உசாமுகுரா (வேளாண் உற்பத்தி மேலாளர்), பயிர் பாதுகாப்பு திருமதி. பிரிஸ்கில் இங்காபயர், பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநரான திரு. லியோன் ஹக்கிசமுங்கு மற்றும் பயிர் பாதுகாப்பு ஆராய்ச்சி சக பெல்லன்சில் உசாய்செங்கா மற்றும் 11 குழு உறுப்பினர்கள் உள்ளடங்குவர்.

அனுராதபுரத்தில், தூதுக்குழு எலயப்பட்டுவ பகுதிக்கு ஒரு களப்பயணத்தை மேற்கொண்டதுடன், அந்த படைப் புழுக்கள் அனுராதபுர பகுதியில் மக்காச்சோள தோட்டங்களை எவ்வாறு தாக்கியுள்ளன என்பதை அவதானித்தனர். ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அண்மையில் மிரிசவெத்திய புனித ஸ்தலத்தில் பதவியில் இருக்கும் வென் ஈதலவெதுனுவே ஞானத்திலேக தேரரின் அழைப்பின் பேரில் பாதிக்கப்பட்ட சோள வயல்களை பார்வையிட்ட பின்னர் ருவாண்டன் தூதுக்குழுவினர் குறித்த இடத்திற்கு வருகை தந்தனர்.

அனுராதபுரத்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட தூதுக்குழுவினர் அங்கு அவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் அவதானிப்புகள் பற்றிய ஒரு சுருக்க விளக்கத்தினை இராணுவத் தளபதியின் அலுவலகத்தில் வழங்கியதுடன், கடந்த வெள்ளிக்கிழமை (1) ருவாண்டாவுக்கு திரும்பியதும் அவர்களால் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர் அந்த பூச்சிகளின் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவர் என உறுதிப்படுத்தினர். ஜெனரல் ஷவேந்திர சில்வா தூதுக்குழுவிற்கு தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்ததோடு, அவர்களை பாராட்டும் முகமாக நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.

Comments are closed.