உயர் கல்வி நடவடிக்கைக்காக வெளிநாடு செல்லவுள்ள இலங்கை மாணவர்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு!!

உயர் கல்வி நடவடிக்கைக்காக வெளிநாடு செல்லவுள்ள இலங்கை மாணவர்களுக்கு நாட்டில் துரிதமாக கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்கள் தொடர்பில் அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போதைய நிலைமையில் மாணவர்கள் மீண்டும் வெளிநாடுகளுக்குச் செல்வதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதோடு, மாணவர்களுக்கு துரிதமாக தடுப்பூசியை வழங்குவதற்கும் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.

மார்ச் மாதத்திற்கு முன்னர் தேவையான தடுப்பூசி மருந்துகளை பெற்று, ஏப்ரல் மாதத்தில் திட்டமிட்ட வகையில் தடுப்பூசியை ஏற்ற முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்திடம் பண வசதி இல்லை என வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எவராவது அரசாங்கத்திற்கு தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு பணவசதி இல்லை, மருந்து களஞ்சிய வசதி இல்லை என கூறினால் அது முற்றிலும் தவறான விடயமாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். சவால்களை வெற்றிகரமாக சமாளிக்க கூடிய ஆற்றல் இருப்பதை சமகால அரசாங்கம் உறுதி செய்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குமாறு ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, கொரோனா தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையில் கொரோனா தடுப்புக் குழு கூட்டத்தில் அமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சுமார் 6,000 பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் காணப்படுவதாகவும், அவர்களில் 1,500 பேர் பிராந்திய செய்தியாளர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். தொற்று நோய்களுக்கு மத்தியில் பொது மக்களுக்கு துல்லியமான தகவல்களை வழங்குவதில் ஊடகவியலாளர்கள், முக்கிய பங்கு வகிப்பதாகவும், ஆகவே அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.