ஊவா மாகாண தமிழ்க் கல்விப் பிரிவுக்கு செந்தில் தொண்டமான் பணிப்புரை!

பதுளை மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ள பாடசாலைகளில் உயர்தரத்துக்கான விஞ்ஞானப் பிரிவை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் முன்னெடுக்குமாறு ஊவா மாகாண தமிழ்க் கல்விப் பிரிவுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார்.

பதுளை மாவட்டத்தில் 10 தமிழ் பாடசாலைகளை, தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான முன்மொழிவு மறைந்த அமைச்சர் அமரர். ஆறுமுகன் தொண்டமான் மூலம் பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானால் அப்போதைய கல்வி அமைச்சர் டலஸ் அழகப் பெருமவிடம் கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கையளிக்கப்பட்டிருந்தது.

பதுளை மாவட்டத்தில் ஒரே தடவையில் 10 பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக தரமுயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அதேவேளை, கடந்த காலங்களில் பண்டாரவளை தமிழ் மகா வித்தியாலயம், லுனுகலை ராமகிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் , செந்தில் தொண்டமான்,ஊவா மாகாண கல்வி அமைச்சராக இருந்த போது விஞ்ஞான பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அப்பாடசாலைகளில் இருந்து கடந்த 4 வருடங்களாக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்ற 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு சென்றுள்ளனர்.

ஊவா மாகாணத்தை சேர்ந்த மாணவர்கள் பல்கலைகழகத்தில் விஞ்ஞான கற்கை நெறியை முடித்து விட்டு வெளிவரும் போது தேசிய பாடசாலைகளாக மாற்றம் பெற்று, விஞ்ஞான பீடம் ஆரம்பிக்கப்பட்ட ஏனைய 8 பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அவர்களுக்கான நியமனங்களை வழங்க முன்கூட்டியே கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.