என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மாணவர் படுகொலை

கேரள மாநிலம் இடுக்கி அடுத்துள்ள பைனாவ் பகுதியில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது, இந்த கல்லூரியில் நேற்று மாணவர் தலைவர் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலின்போது கல்லூரி வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்புடைய எஸ்.எப்.ஐ. என்ற அமைப்பின் ஆதரவு மாணவர்களும், காங்கிரஸ் கட்சி சார்புடைய கே.எஸ்.யூ. என்ற அமைப்பின் ஆதரவு மாணவர்களும் மோதிக் கொண்டனர். அப்போது கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்த கண்ணூர் வட்டப்பாறை பகுதியை சேர்ந்த தீரஜ் (வயது 23) என்ற மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்புடைய எஸ்.எப்.ஐ. என்ற மாணவர் அமைப்பை சேர்ந்தவர்.

இதனிடையே கத்தியால் குத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் படுகாயமடைந்த தீரஜை சக மாணவர்கள் மீட்டு இடுக்கி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் தீரஜ் பரிதாபமாக இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் மாணவரை கொலை செய்தது வெளியிலிருந்து கல்லூரிக்குள் நுழைந்த இளைஞர் காங்கிரஸ் கட்சியினர்தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குற்றம்சாட்டிள்ளது. இந்த சம்பவம் காரணமாக கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது, மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக போலீசாரால் வெளியேற்றப்பட்டனர்.

மாணவர் கொலை தொடர்பாக இடுக்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறுகையில், கல்லூரி வளாகத்தில் நடந்த மாணவர் கொலை வேதனை அளிக்கிறது. குற்றவாளிகளை உடனே கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Comments are closed.