ஐ.நா.பாதுகாப்பு சபையில் நோர்வேக்கு நிரந்தரமற்ற அங்கத்துவம்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில், 2021 – 2022 காலப்பகுதிக்கான நிரந்தரமற்ற அங்கத்துவத்தை நோர்வே ஏற்றுள்ளது. இதனூடாக இந்தியா, அயர்லாந்து, கென்யா, மெக்சிகோ ஆகிய நிரந்தரமற்ற அங்கத்துவத்தைக் கொண்ட இதர நாடுகளுடன், நோர்வேயும் இணைந்துள்ளது.

2001 – 2002 காலப்பகுதியில் பாதுகாப்பு அவையில், இறுதியாக அங்கம் வகித்திருந்ததைத் தொடர்ந்து, 20 ஆண்டுகளின் பின்னர், தற்போது இந்த அங்கத்துவத்தை ஏற்றுள்ளது.

ஐந்து நிரந்தர அங்கத்தவர்களான அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய இராஜ்ஜியம், சீனா, ரஷ்யா ஆகியவற்றுக்கு மேலதிகமாக, பாதுகாப்பு அவையில், முதல் வருடத்தில் இதர தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களான எஸ்டோனியா, வியட்நாம், நைகர், டுனிசியா, சென் வின்சன்ட், கிரெனடின்ஸ் ஆகியவற்றுடனும்,முழுக் காலப்பகுதிக்குமாக அயர்லாந்து, இந்தியா, கென்யா, மெக்சிகோ போன்ற நாடுகளுடனும் நோர்வே பங்கேற்கும்.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் நோர்வேயின் அர்ப்பணிப்பு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. ஸ்தாபக அங்கத்தவர் எனும் வகையில், ஐக்கிய நாடுகளுக்கு தொடர்ச்சியாகத் தனது ஆதரவை, நோர்வே வழங்குவதுடன், ஸ்தாபிக்கப்பட்டது முதல் அமுலிலுள்ள விதிமுறைகள் அடிப்படையிலான சர்வதேச கட்டமைப்புக்கும் ஆதரவளிக்கின்றது.

‘எமது முயற்சிகளுக்கு ஆதாரமாக, சர்வதேச சட்டம், மனித உரிமைகள் போன்றன அமைந்திருக்கும். சமாதான இராஜதந்திரம், பெண்களை உள்வாங்குதல், சிவிலியன்களையும் காலநிலையையும் பாதுகாத்தல், பாதுகாப்பு போன்றன எமது முன்னுரிமை வழிகாட்டல்களாக அமைந்திருக்கும்’ என, தேசிய கொடியேற்றும் வைபவத்தில், ஐக்கிய நாடுகளுக்கான நோர்வே தூதுவர் மோனா ஜுல் தெரிவித்துள்ளார்.

Comments are closed.