‘ஒக்சிஜனை தடுத்தால் தூக்குத்தண்டனை’

கொரோனா வைரஸ் 2ஆவது அலை சுனாமி போல் இருக்கிறது. ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என்று புது டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் 2ஆவது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுக் காப்பாற்ற முடியாமல் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

ஒக்சிஜன் பற்றாக்குறையால் கங்கா ராம் மருத்துவமனையில் 25 கொரோனா தொற்றாளர்கள் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் அதே பிரச்சினையால், 20 கொரோனா தொற்றாளர்கள், நேற்றிரவு உயிரிழந்தனர்.

ஒக்சிஜன் விநியோகத்தை சீரமைத்து, முறையாக வழங்கக் கோரி ஏற்கெனவே புதுடெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பாலி அமர்வு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது.

பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் வாங்கியாவது மக்களுக்கு ஆக்சிஜனைக் கொண்டுவந்து கொடுங்கள் என்று மத்திய அரசை விளாசினர்.

“ஒக்சிஜன் விநியோகத்தை தடுக்கும் மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் யாரையும் விட்டுவைக்க மாட்டோம்.

ஒக்சிஜன் விநியோகத்தை தடுப்பவர்கள் குறித்து ஒரு சம்பவத்தை புதுடெல்லி அரசு எங்களிடம் உதாரணமாகக் காட்டினால் போதும். அந்த அதிகாரிகளைத் தூக்கில் போடுவோம்” என நீதிபதிகள் எச்சரித்தனர்.

Comments are closed.