கடுகதி தொடருந்து சேவைகள் மீள ஆரம்பம்

நகரங்களுக்கு இடையிலான கடுகதி தொடருந்து சேவைகள் நாளை (08) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்பட்டதை அடுத்து கடந்த முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான அலுவலக தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், இரவு 7 மணியின் பின்னர் தூர மற்றும் குறுந்தூர தொடருந்து சேவைகள் என்பன வழமை போன்று இடம்பெறுவதில்லை. இந்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள முறைமைக்கு அமைய இரவு 7 மணியின் பின்னர் பயணிகளின் அவசியத்தன்மை கருதி மாத்திரம் தொடருந்து சேவைகளை முன்னெடுக்க உள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது 180 முதல் 200 தொடருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நாளை (08) முதல், காங்கேசன்துறை வரை இடம்பெறும் நகரங்களுக்கு இடையிலான தொடருந்து சேவையை மீண்டும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு முதல் கண்டி வரையில் சேவையில் ஈடுபடும் நகரங்களுக்கு இடையிலான தொடருந்து சேவையும், நாளை (08) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

எவ்வாறிருப்பினும், வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் மண்சரிவு காரணமாக, பதுளைக்கான தொடருந்து சேவையை ஆரம்பிக்க முடியாதுள்ளது. நிலைமை சீரானதன் பின்னர், அந்தத் தொடருந்து சேவை மீள ஆரம்பிக்கப்படும். யாழ் தேவி தொடருந்து தற்போது யாழ்ப்பாணத்துக்கான சேவையில் ஈடுபடுகின்றது. ஏனைய தொடருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்த எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம், அடுத்த கலந்துரையாடல்களில், இரவுநேர அஞ்சல் தொடருந்து சேவைகளையும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகத் தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.