கட்டாரில் இலங்கையர் சுட்டுக்கொலை

கட்டாரில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டார்.

கட்டாரின் அல் வாப் (Al Waab) பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டடத் தொகுதி ஒன்றில் நேற்று முன்தினம்(26) இந்தம் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக டோஹா செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

கட்டார் இளைஞர் ஒருவர், பெண் ஒருவருடன் வாகனத்தின் மூலம், குறித்த குடியிருப்புத் தொகுதிக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது, அங்குக் கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த காவலாளி, அவரின் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கோரியுள்ளார்.

எனினும், அடையாள அட்டையைக் காண்பிக்க மறுத்தமையால், காவலாளி அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது காவலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய குறித்த நபர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்கான இலங்கையைச் சேர்ந்த காவலாளி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த மற்றுமொரு காவலாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.