காபி தோட்ட அதிபர் வெட்டிக்கொலை

சிக்கமகளூரு மாவட்டம் மட்டவரா கிராமத்தை சேர்ந்தவர் பிரகருத் (வயது 29). இவர் காபி தோட்ட அதிபர். இவருக்கு அந்தப் பகுதியில் காபி தோட்டம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பிரகருத் தனது காபி தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

பின்னர் அவர் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மர்மநபர்கள் அங்கு வந்து பிரகருத்தை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றவே அவர்கள், தாங்கள் மறைத்துவைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் பிரகருத்தை சரமாரியாக வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே துடி, துடித்து செத்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த கொலை சம்பவம் நடந்தது பற்றி தகவல் அறிந்ததும் பிரகருத்தின் குடும்பத்தினர், உறவினர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் பிரகருத்தின் உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சிக்கமகளூரு புறநகர் போலீசார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதத்தில் கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.