கிளிநொச்சியில் மீட்கப்பட்ட ரீ-56 தோட்டாக்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது

கிளிநொச்சி – கோரக்கன்கட்டு பிரதேசத்தில் காணி ஒன்றில் காணப்பட்ட ரீ-56 தோட்டாக்களின் எண்ணிக்கை 100,000ஐ தாண்டியுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி குறித்த வீட்டுத் தோட்டத்தில் கட்டுமானப் பணிகளுக்காக அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது இரண்டு தோட்டா பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த இடம் தொடர்பாக கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பெறப்பட்ட உத்தரவின் பேரில் நேற்று (15) காவல்துறை அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் மேற்கொண்ட அகழ்வுப் பணியின் போது மேலும் இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பெட்டிகளில் இருந்து ரீ- 56 ரகத்தைச் சேர்ந்த சுமார் 64,500 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இப்பெட்டிகள் இல்லாமல் குழிக்குள் ஏறக்குறைய 40,000 க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தப் தோட்டாக்கள் யுத்த காலப்பகுதியின்போது, ​​தமிழீழ விடுதலைப் புலிகளால்  மறைத்து வைக்கப்பட்டவையாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேசம் யுத்த காலத்தில் ஆயுதக் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் குறித்த பகுதியில் பெருமளவான வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்தனர்.

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கிளிநொச்சி காவல்துறை விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் குறித்த இடத்தில் இன்று (16) மேலதிக அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.