கெசல்வத்த பவாஸ் கொலை தொடர்பில் நால்வர் கைது

கெசல்வத்த பவாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கெசல்வத்த காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 4 ஆம் திகதி இரவு பாதாள உலகக்குழு உறுப்பினரான கெசல்வத்த பவாஸ் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் நேற்று (5) இரவு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, கொலைக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும், 4 கூரிய வாள்கள் சந்தேகநபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், கொலையின்போது, சந்தேகநபர்கள் வருகைத்தந்த மகிழுந்தொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனை கண்டுபிடிப்பதற்காக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் கெசல்வத்த பகுதியைச்சேர்ந்த 23  – 31 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செசல்வத்த காவல்துறையினர் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments are closed.