கையை இழந்த மாணவனிற்கு இரக்கம் காட்டியதால் யாழ்ப்பாண பல்கலைகழக விரிவுரையாளர் ஒருவர் பணியிழப்பு!!

ஒற்றை கையை இழந்த மாணவனிற்கு இரக்கம் காட்டியதால் யாழ்ப்பாண பல்கலைகழக விரிவுரையாளர் ஒருவர் பணியை இழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதன்படி குறித்த மாணவனுக்கு உதவிய யாழ் பல்கலைகழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முத்துகிருஷ்ணா சர்வானந்தனை பதவிநீக்குவதென யாழ்ப்பாண பல்கலைகழக பேரவை முடிவு செய்துள்ளது.

பரீட்சை வினாத்தாளை மாணவர்களுடன் பகிர்ந்தார் என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள மிகச்சில பொருளாதார வல்லுனர்களில் ஒருவரான மு.சர்வானந்தன் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நியமனம் பெற கூடாதென, குறிப்பிட்ட துறை சார்ந்தவர்கள் மேற்கொண்ட பெரும் முயற்சியையும் மீறி சில வருடங்களின் முன்பாக அவர் யாழ் பல்கலைகழகத்தில் நியமனம் பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவரை பல்கலைகழகத்திலிருந்து வெளியேற்ற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னணியில், நேற்று முன்தினம் கூடிய யாழ்ப்பாண பல்கலைகழக பேரவையின் கூட்டத்தில், அவரை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களின் முன்னர் பரீட்சை வினாத்தாளின் ஒரு பகுதியை மாணவர்கள் அனைவருடனும் அவர் பகிர்ந்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியை சேர்ந்த குறித்த மாணவன் , பரீட்சைக்கு 36 மணித்தியாலங்களின் முன்னதாக சர்வானந்தனை தொடர்பு கொண்டு , தான் பரீட்சையில் தோல்வியடைந்தால் தனது குடும்பத்தின் எதிர்காலமே பாழாகி விடும் என்பதால் சில வினாக்களை கூறுமாறு இறைஞ்சியுள்ளார்.

ஒரு மாணவனிற்கு மட்டும் அந்த கேள்விகளை வழங்காமல், வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களிற்கும் அந்த கேள்விகளை விரிவுரையாளர் சர்வானந்தன் அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் பல மாதங்களாக கிடப்பிலிருந்த நிலையில் தற்போது தூசு தட்டப்பட்டு, விரிவுரையாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு பல்கலைகழக விரிவுரையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கேள்விப்பத்திரத்தை பகிர்வது தவறென்ற போதும், இதைவிட பாரிய தவறு புரிந்தவர்கள் பல்கலைகத்தில் தொடரும் போது, சர்வானந்தன் போன்ற ஆளுமைகளை பல்கலைகழகத்தை விட்டே நீக்குவது பொருத்தமான நடவடிக்கையா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெறாதவர்கள், பல்கலைகழகத்தில் விரிவரையாளர்களாக பணிக்கு வருவது மிகச்சவாலானது என்ற விமர்சனம் பல தரப்பினராலும் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் குறித்து பேசிய விரிவுரையாளர் ஒருவர்,

புதியவர்கள்- வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்கள் வரும்போது, அவர்களை தவிர்ப்பதற்கான உத்திகளில் ஒன்றாக பல விடயங்களை கையிலெடுப்பார்கள். அதிலொன்று- இவர் போருக்குள் வாழாதவர் என்ற வியாக்கியானத்தை வைப்பார்கள். தம்மை விட அதிக தகுதியுடையோரை தவிர்ப்பதற்கான உத்தியாக இதை பாவிக்கிறார்கள். இந்த விடயத்தில் பல்கலைகழகத்திற்குள் அனைத்து துறைகளிற்குள்ளும் ஒத்திசைவாக போக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பேரவை உறுப்பினர்களும் அரசியல் நியமனங்கள் என்பதால் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாமலுள்ளதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைகழக பேரவைக்கு இரண்டு தெரிவுகள் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு 2 ஆண்டுகள் தகுதிகாண் காலம் வழங்குதல், பணிநீக்கம் செய்தல் என்ற தெரிவுகளில், பொருளியல்துறை தலைவரின் கடிதத்தின் அடிப்படையிலும்- அவரை பதவிநீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ் பல்கலைகழக விரிவுரையாளரின் பதவி நீக்க விவகாரம் ஒரு பழிவாங்கல் நடவடிக்கையென பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.

Comments are closed.