கொரோனா தடுப்பூசிகளில் ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை வழங்கி தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் தெரிவிப்பு!

இலங்கைக்கு கிடைக்கவுள்ள கொரோனா தடுப்பூசிகளில் முதற் கட்டமாக சுகாதாரத் துறையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை வரவேற்கத் தக்க விடயம் ஆகும்.

அதேபோல், ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை வழங்கி தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஹட்டனில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.

கடந்த ஒரு வருட காலமாக தொற்றாளர்களை இனங்கண்டு, அவர்களுக்கு சிகிச்சையளித்து குணமாக்குவதற்கும், தனிமைப்படுத்தி கவனிப்பதற்கும் சுகாதாரத் துறையினரும், பொலிஸாரும், இராணுவத்தினரும் தமது உயிரையும் பொருட்படுத்தாது அளப்பரிய சேவைகளை செய்து வந்துள்ளார்கள்.

அதன் காரணமாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, உயிரிழப்புகளும் குறைந்துள்ளன.

எனவே, இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து வரவழைக்கப்படவுள்ள கொரோனா தடுப்பூசியில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் சரியான முடிவாகும்.

அதேபோல், பாடசாலைகளில் தமது உயிரைப் பணயம் வைத்து மாணவர்களுக்கு கற்பிக்கும் நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

பாடசாலைகளுக்கு பல இடங்களில் இருந்தும் மாணவர்கள் வருகின்றார்கள். அவர்கள் எந்த சூழலில் இருந்து வருகை தருகின்றார்கள் என்ற விபரம் ஆசிரியர்களுக்குத் தெரியாது.

கடந்த ஒரு வருட காலமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலைகள் திறக்கப்படும் போது அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்,

புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறவேண்டும் என்ற ஆர்வத்தில் தமது கடமைகளை செய்ய முன்வருகின்றார்கள்.

ஆகவே, ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை ஏற்ற சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஆசிரியர்கள் உட்பட கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றவர்களையும் தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றவர்களையும் சமூகம் மிகவும் கேவலமாகவும், அருவருப்பாகவும் நோக்குகின்ற நிலைமை மாற வேண்டும்.

உலக நாடுகளில் எத்தனையோ பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி குணமடைந்துள்ள நேரத்தில் மலையகத்திலும், தொற்றாளர்கள் குணமடைந்து வருகின்றார்கள்.

கொரோனா தொற்று என்பது எல்லோருக்கும் பொதுவானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஒரு சிலருக்குத் தான் தொற்று ஏற்படும், மற்றவர்கள் தப்பித்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

எனவே, தொற்றாளர்களை குற்ற உணர்வோடு நோக்காமல் ஒவ்வொருவரும் மனித நேயத்தைக் கடைப்பிடித்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழ பழகிக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுள்ளார்

Comments are closed.