கொழும்பு – ஹொரணை வீதியில் போக்குவரத்து மட்டுப்பாடு

கொழும்பு – ஹொரணை பிரதான வீதியில், போகுந்தர பாலத்தின் அபிவிருத்திப் பணிகள் காரணமாக, இன்று முதல் மறு அறிவித்தல்வரை, காலை 6 மணி தொடக்கம் இரவு 8 மணிவரையான காலப்பகுதியில், போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

போகுந்தர பாலத்தின் அபிவிருத்திப் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறியப்படுத்தியதற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இதன்படி, காலை 6 மணிமுதல், பிற்பகல் 3 மணிவரையான காலப்பகுதியில், கொழும்பு நோக்கிய திசையில் இரு ஒழுங்கைகளுக்கும், ஹொரணை நோக்கிய திசையில் ஒரு ஒழுங்கைக்கும் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பிற்பகல் 3 மணிமுதல், நாளை காலை 6 மணிவரையில், கொழும்பு நோக்கிய திசையில் ஒரு ஒழுங்கைக்கும், ஹொரணை நோக்கிய திசையில் இரு ஒழுங்கைகளுக்கும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், காலை 6 மணி தொடக்கம் 9 மணி வரையிலும், பிற்பகல் 4 மணி தொடக்கம் இரவு 8 மணிவரையிலும், பயணிகள் பேருந்து தவிர்ந்த ஏனைய பார ஊர்திகள் போகுந்தர பாலத்தின் ஊடாக பயணிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

எனவே, குறித்த காலப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து சிக்கல் நிலையைத் தவிர்ப்பதற்கு, சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Comments are closed.