க.பொ.த சாதாரண தர பரீட்சை சிறப்பாக நடைபெற்று வருகின்றது

சுகாதார வழிமுறைகளுக்கு அமைய விசேட பாதுகாப்புக்கு மத்தியில் கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை இன்று ஆரம்பமானது.

நாடளாவிய ரீதியில் 4, 513 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றுவரும் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 622,352 பரீட்சாத்திகள் தோற்றியுள்ளனர்.

குறித்த பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் அனைத்து பரீட்சை நிலையங்களிலும் தொற்றும் நீக்கும் நடவடிக்கை நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்று ஆரம்பமாகியுள்ள பரீட்சைக்காக கொவிட்19 தொற்றுறுதியான 25 மாணவர்களும் தோற்றியுள்ளதுடன் அவர்களுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இன்று முற்பகல் 8.30 அளவில் சமயப் பாட பரீட்சை ஆரம்பமாகியதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிட்டார்.

இதேவேளை நாடு முழுவதும் உள்ள பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்கள் சுகாதார முறைமைகளை பின்பற்றி வருகை தந்திருந்ததாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.

அதேநேரம் இளம் குற்றவாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாதுக்கை சுனிதா வித்தியாலத்தில் 12 மாணவர்கள், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் இன்று பரீட்சைக்கு தோற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் சுனாமியின் போது அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பிய ஜெயராஜா அபிலாசும் இன்று கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றினார்.

மட்டக்களப்பு செட்டிபாளையம் மகா வித்தியாலத்தில் அவர் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

Comments are closed.