சர்வகட்சி மாநாடு ஆரம்பம்

சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பன சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைகுறித்து கலந்துரையாடுவதற்காக இந்த சர்வகட்சி மாநாட்டு நடத்தப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அத்துரலிய ரதன தேரர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பதுடன், தேசிய மக்கள் சக்தியும் கலந்துகொள்ளவில்லை.

அத்துடன், எதிரணியின் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதலான கட்சிகளும், சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்துள்ளன.

அதேநேரம், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸும், ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுள் ஒன்றான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோவும் சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.