சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாட்கள் சி.பி.ஐ. காவல்

தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பரை, தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததுடன், பிற சலுகைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மும்பையில் உள்ள, சித்ரா ராமகிருஷ்ணன் வீடு உட்பட, அவருக்கு தொடர்புடைய அலுவலகங்களில், மும்பை வருமான வரி புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கடந்த பிப்ரவரி 17ந்தேதி சோதனை நடத்தினர்.  இதேபோல ஆனந்த் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தது.

தேசிய பங்கு சந்தையின் நிதி மற்றும் வணிக திட்டங்கள், ஈவுத்தொகை காட்சிகள் மற்றும் நிதி முடிவுகள் உள்ளிட்ட சில உள் ரகசிய தகவல்களை தன்னை வழி நடத்தும் இமயமலையில் உள்ள ஒரு யோகியுடன், சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்து கொண்டதாகவும், பரிமாற்றத்தின் ஊழியர்களின் செயல்திறன் மதிப்பீடுகள் குறித்தும் அவரிடம் கலந்தாலோசித்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.  இது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், தேசிய பங்கு சந்தை விவரங்களை கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக முன்னாள் தலைமை செயலதிகாரிகளான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ரவி நரேன் மற்றும் அவரது சகோதரர் ஆனந்த் சுப்பிரமணியம் ஆகியோருக்கு எதிராக மத்திய புலனாய்வு பிரிவு (சி.பி.ஐ.) கடந்த பிப்ரவரி 18ந்தேதி லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது.  லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் மூவரில் யாரும் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்பதை உறுதி செய்வதற்காக எல்.ஓ.சி. பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேலும் இமயமலை யோகி, சித்ரா ராமகிருஷ்ணன் இடையேயான பல்வேறு மின்னஞ்சல்களை சி.பி.ஐ. ஆய்வு செய்தது.

இதன் தொடர்ச்சியாக, தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் அதன் முன்னாள் மேலாண் இயக்குனரான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசகராகவும், முன்னாள் செயலாக்க அதிகாரியாகவும் செயல்பட்டு வந்தவர் என கூறப்படும் ஆனந்த் சுப்பிரமணியம் உள்ள இடம் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.  இவரை, சி.பி.ஐ. அதிகாரிகள் 24ந்தேதி இரவு

சென்னையில் வைத்து கைது செய்தனர்.  இந்த வழக்கில் கூடுதலாக இருவருக்கு தொடர்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.  இதன்படி, ஆனந்திடம் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் சி.இ.ஓ. சித்ரா ராமகிருஷ்ணா, பங்கு சந்தை விவரங்களை முன்கூட்டியே முகவர்களுக்கு தெரிவித்து உள்ளார் என குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த வழக்கில் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது.  இதனை தொடர்ந்து அவரை நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

இதன்பின் அவரை, சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டுக்கு இன்று அழைத்து வந்து நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தினர்.  தேசிய பங்கு சந்தை மற்றும் செபி அதிகாரிகள் முன் அவரை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரி, 14 நாட்கள் விசாரணை காவலுக்கு அனுமதி அளிக்க கோரி நீதிபதிகளிடம் சி.பி.ஐ. முறையிட்டது.  இந்த வழக்கின் தீர்ப்பு 3.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என செய்தி வெளியானது.  இந்த நிலையில், தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாட்கள் சி.பி.ஐ. காவல் அளிக்கப்பட்டு உள்ளது.

Comments are closed.