சிறுமி விவகாரத்தை அரசியலாக்கக்கூடாது: சபையில் ஜீவன் தெரிவிப்பு

ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிவந்த நிலையில், தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக, இன்று நாடாளுமன்றத்திலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

இந்த விடயத்தை அரசியலாக்கக்கூடாது என்றும், முழுமையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சிறுமி விவகாரத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் போர்வையில் சிலர் சிறுமியின் படத்துடன் தமது கட்சியின் பெயரையும் இணைத்து அனுதாப பதாகையில் வெளிப்படுத்தி இதனை அரசியலாக்க முற்படுகின்றனர். இவ்விடயத்தை அரசியலாக்கக்கூடாது.

இந்த ஒரு சம்பவத்தை மாத்திரம் வைத்து ஒட்டுமொத்த மலையக சமூகத்தை ஒரு சிலர் தவறாக சித்தரிப்பது தவறான விடயமாகும்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் குறித்த சிறுமி 18 வயதானவர் என்றே தாம் எண்ணியிருந்ததாக அவர் தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாததொன்று.

கடந்த 8 ஆண்டுகளாக முன்னாள் அமைச்சரின் வீட்டில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் தற்போது தகவல்கள் வெளிவருகின்றன. இதற்கு முன்னர் இது பற்றி அவர் அறிந்திருக்கவில்லை என்பது புதுமையாக உள்ளது என்றார்.

அதேநேரம், மலையகப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக கொழும்பு போன்ற நகரங்களில் வீட்டுப் பணிகளில் ஈடுபடுகிறார்கள் என்ற கருத்து நிலவுகின்ற போதும், அது உண்மையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகபடியான வீட்டுப் பணிப் பெண்கள் தொழில்புரிகின்றனர்.

அவர்களில் 80 சதவீதமானவர்கள் சிங்களப் பெண்கள் என்று, 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் கணிப்பீட்டில் தெரியவந்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இதேவேளை,  ஹிஷாலினியின் மரணத்தைத் தொடர்ந்து, சிறுவர் பாதுகாப்பு தொடர்பான ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் முன்வைத்த நிலையில் அதில்  இம்ரான் மஹ்ரூப், இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் கருத்துரைத்தனர்.

ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை விவாதத்தில் உரையாற்றிய தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,  18 வயதுக்கு உட்பட்டவர்களை வீட்டுப் பணிகளில் ஈடுபடுத்த முடியாது என்ற சட்டம் இந்த மாதத்துக்குள் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கான யோசனைகள் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டிருப்பதுடன்,  அடுத்த வாரம் ஆலோசனைக் குழுவில் ஆராயப்பட்டு,  இதற்கான இறுதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் இந்த விடயம் தொடர்பான சட்டத்திருத்தத்துக்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளின் சட்டங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா  தெரிவித்தார்.

Comments are closed.