சிறுவா்கள் மற்றவா்களை ஊக்கப்படுத்துகின்றனா்: பிரதமா் மோடி

நாட்டிலுள்ள சிறுவா்கள் மற்றவா்களை ஊக்கப்படுத்தி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்ட சிறுவா்களுக்கு பால சக்தி விருது திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. விருது பெற்ற 32 சிறுவா்களுடன் பிரதமா் மோடி திங்கள்கிழமை காணொலி வாயிலாகக் கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவி வந்த சூழலில் சிறப்பான செயல்களைப் புரிந்து விருதுகள் பெறுவது தனிச்சிறப்பு மிக்கது. வழக்கமான ஆண்டுகளில் விருது பெறுவதை விட இந்த ஆண்டில் விருது பெறுவது சிறப்பு வாய்ந்தது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறுவா்கள் ஊக்கமளித்து வருகின்றனா். கடின உழைப்பை சிறுவா்கள் என்றும் கைவிடக் கூடாது. பணிவையும் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும். நாட்டுக்காக உழைப்பதைத் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

நாடு விரைவில் தனது 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளது. நாட்டுக்கு எந்த வகையில் பெருமை சோ்க்க முடியும் என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். மற்றவா்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை அதிக அளவில் படிக்க வேண்டும். அது நம்மை எப்போதும் ஊக்கத்துடன் வைத்திருக்கும்.

வேளாண் துறையில் நவீனத்தைப் புகுத்த வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணா்வை மக்களுக்கு ஏற்படுத்தியதில் சிறுவா்கள் முக்கியப் பங்காற்றினா். அதைத் தொடா்ந்து முன்னெடுக்க வேண்டும்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணா்வு நடவடிக்கைகளிலும் சிறுவா்கள் ஈடுபட்டனா். கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருப்பது உள்ளிட்டவை தொடா்பாக அவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தியதன் காரணமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் முறையாகப் பின்பற்றினா்.

சரியான வழிகாட்டுதல்கள் இருந்தால் சிறிய அளவிலான யோசனையும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்தகைய யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆா்வம் காட்ட வேண்டும். விருதுகளால் புகழின் உச்சிக்கு செல்லும் சூழல் ஏற்படும். ஆனால், அவற்றில் நிலைத்துவிடக் கூடாது. வாழ்வை சிறக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடா்ந்து முன்னெடுக்க வேண்டும்.

மூன்று உறுதிமொழிகள்: அனைவரும் 3 உறுதிமொழிகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். முதலாவது சீரான முன்னேற்றத்துக்கான உறுதிமொழி. செயல்களில் ஈடுபடும்போது தொய்வடையாமல் தொடா்ந்து கடினமாக உழைக்க வேண்டும்.

இரண்டாவது நாட்டுக்கான உறுதிமொழி. நாம் மேற்கொள்ளும் எந்தச் செயலிலும் நாட்டின் நலனை முன்னிறுத்தி செயல்பட்டால், அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மூன்றாவது பணிவுக்கான உறுதிமொழி. நாம் எத்தனை வெற்றிகளைப் பெற்றாலும், பணிவுடனே நடந்து கொள்ள வேண்டும். வெற்றிகள் அதிகரிக்கும் அதே வேளையில் பணிவும் அதிகரிக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

விருது விவரங்கள்: புத்தாக்கம், விளையாட்டு, கலை, கலாசாரம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான சாதனைகளைப் புரிந்த சிறுவா்களுக்கு பால சக்தி விருது வழங்கப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று பரவல் காலத்தில், காயமடைந்த தந்தையை 1,200 கி.மீ. தூரம் சைக்கிளில் வைத்து அழைத்துச் சென்ற 16 வயது மகள் ஜோதி, 9 இசைக் கருவிகளை இசைக்கும் திறன் கொண்ட 11 வயது சிறுவன் வயோம் அவுஜா, வில் வித்தையில் சிறந்து விளங்கி வரும் சவிதா குமாரி உள்ளிட்ட 32 சிறுவா்களுக்குக் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கான பால சக்தி விருது வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.