சீகிரியா சுற்றுலாத்தளத்தில் புதிய வரி விதிப்பு

சீகிரியாவிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் சஃபாரி வாகனங்களுக்கு வருடாந்தம் 3,000 ரூபா புதிய வாகன வரிக்கான அனுமதிப்பத்திரம் வழங்க, தம்புள்ளை பிரதேச சபையும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் தீர்மானித்துள்ளன.

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் போது சஃபாரி வாகனங்களால் சீகிரிய கிராம வீதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்திற்கொண்டு இந்த வரியை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிகிரியா சுற்றுலா வலயத்திற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு 50க்கும் மேற்பட்ட சஃபாரி வாகனங்கள் ஈடுபடுத்தப்படுவதுடன், ஒரு சுற்றுலாப் பயணிக்கு 3,000 முதல் 4,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அந்த தொகையில் வாகன உரிமையாளருக்கு 1,000 ரூபா மாத்திரமே கிடைக்கும் என சீகிரிய சஃபாரி வாகனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மீதமுள்ள பணம், வழிகாட்டிகள் மற்றும் ஒருங்கிணைக்கும் இடைத்தரகர்களுக்கு செல்கிறது.

இதுவரை சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லவதற்கான வரி விதிப்போ அல்லது உரிமமோ சஃபாரி வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், புதிய வரி விதிப்பால் தாம் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக சஃபாரி வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தம்புள்ளை பிரதேச சபையின் தவிசாளர் கே.ஜி.சோமதிலக்கவிடம் வினவியபோது, சீகிரியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிக்கு 7,000 ரூபா அறவிடப்படுகின்ற போதிலும், அனைத்துப் பணமும் மத்திய கலாசார நிதியத்தின் மூலம் பெறப்படுவதாகத் தெரிவித்தார்.

Comments are closed.