‘ஜைகோவ்-டி’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ‘ஆர்டர்’

ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனத்தார் ஜைகோவ்-டி என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். ஜைடஸ் கேடிலா நிறுவனம், மாதம் ஒரு கோடி தடுப்பூசிகளை வினியோகிக்கிற நிலையில் இருப்பதாகவும், இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகத்திடம் தகவல் தெரிவித்து விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் ஒரு கோடி ஜைகோவ்-டி தடுப்பூசி வினியோகத்துக்கு ஜைடஸ் கேடிலா நிறுவனத்திடம் மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தடுப்பூசி ஒன்றின் விலை ரூ.358 (வரியின்றி) ஆகும். இந்த விலையில், தடுப்பூசியை செலுத்த பயன்படுத்தப்படும் வலியற்ற ஜெட் அப்ளிகேட்டரும் அடங்கும். முதலில் இந்த தடுப்பூசியை அனேகமாக பெரியவர்களுக்கு செலுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த மாதம், ஜைகோவ்-டி தடுப்பூசி தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் என அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக இன்னும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இணை நோய் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த பட்டியலை தயாரிக்கும் பணி உள்பட குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுவதற்கான விரிவான திட்டத்தை தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு உருவாக்கி வருகிறது.

Comments are closed.