டக்ளஸிடம் ஜனாதிபதி அளித்த உறுதி!

நீண்ட நாட்களாக நிரந்தர நியமனம் இன்றிக் கடமையாற்றி வருகின்ற சுகாதார தொண்டர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, (Gotabaya Rajapaksa) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு (Douglas Devananda) உறுதியளித்துள்ளார்.

நேற்று (29) வெள்ளிக்கிழமை இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவுக்கும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இதுகுறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதாரத் தொண்டர்களின் நிரந்தர நியமனம் விவகாரத்தை கடந்த காலங்களில் சில அரசியல் தரப்புக்கள் குறுகிய அரசியல் நோக்குடன் கையாண்டமையால் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், குறித்த விடயத்தை ஜனாதிபதி கோட்டாபயவின் கவனத்திற்கு கொண்டு சென்ற டக்ளஸ் தேவானந்தா, சேவை மூப்புக் கவனத்தில் கொள்ளும் வகையில் மீண்டும் புதிதாக நேர்முகத் தேர்வுகள் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து, கோட்டாபய, டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடி பின்னர் சுகாதார தொண்டர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, தன்னுடைய செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Comments are closed.