’டிசெம்பருக்குள் புது அரசியலமைப்பு’

இவ்வாண்டு டிசெம்பர் மாதத்துக்குள், உத்தேச புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்த கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அவ்வரசியலமைப்புக்கான வரைபை, எதிர்வரும் ஜூன் மாதத்தில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க, நிபுணர் குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.

இந்தப் புதிய அரசியலமைப்பில், தேர்தல் முறைமை தொடர்பான விடயம், பிரதான அம்சமாகக் காணப்படும் என்றும், அமைச்சர் குறிப்பிட்டார்.

களனி ரஜமஹா விகாரையில் மத வழிபாட்டில் ஈடுப்பட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அமைச்சர், உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற, நிபுணர் குழுவின் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அந்த நிபுணர் குழுவினர், அரசியல் கட்சிகளிடமிருந்தும் அமைப்பினரிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும், அரசியலமைப்பு தொடர்பான யோசனைகளைக் கோரியுள்ளார்கள் என்றார்.

“எக்காரணத்துக்காகவும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தடைப்படாது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம். நாட்டுக்குப் பொருந்தும் வகையிலான அரசியலமைப்பை உருவாக்க அரசாங்கம் உரிய கவனஞ்செலுத்தியுள்ளது. அரசியலமைப்பு குறித்து தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய இரு பிரதான வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றியுள்ளோம். அரச நிர்வாகத்துக்குத் தடையாக இருந்த 19ஆவது திருத்தத்தை நீக்கி, 20ஆவது திருத்தத்தைப் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றியுள்ளோம்.

“அத்துடன், புதிய அரசியலமைப்பை உருவாக்குவது சாத்தியமற்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ள கருத்து உண்மைக்கு புறம்பானது. அவரது அரசியல் நிலை குறித்து நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்” என்று, அமைச்சர் பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார். ​

Comments are closed.