தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 38 பேர் பலி

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நாட்டில் அரசு நடத்தும் தங்கச்சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுரங்கங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கத்தை தோண்டி எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், அந்நாட்டின் மேற்கு கொர்டோபென் மாகாணம் ஃப்ஜா என்ற கிராமத்தில் அரசு நடத்தும் தங்கச்சுரங்கம் செயல்பட்டு வந்தது. அந்த தங்கச்சுரங்கம் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் மூடப்பட்டிருந்தது. இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த படையினரும் விலக்கிக்கொள்ளப்பட்டனர்.

இந்நிலையில், அந்த தங்கச்சுரங்கத்திற்குள் நேற்று அனுமதியின்றி நுழைந்த 50-க்கும் மேற்பட்டோர் தங்கம் எடுக்கும் நோக்கத்தோடு சுரங்கத்தை தோண்டியுள்ளனர்.

அப்போது, சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில், சுரங்க இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த சுரங்க விபத்தில் 38 பேர் உயிரிழந்ததாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Comments are closed.