தடுப்பூசி போடாதவர்களை தரக்குறைவாக விமர்சித்த அதிபர் மேக்ரான்

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் பிரான்சில் தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே அங்கு கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் பிரான்சில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களை அதிபர் மேக்ரான் மிகவும் தரக்குறைவாக விமர்சித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது இது குறித்து அவர் கூறுகையில் “தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறையில் அடைக்கப்போவதில்லை. அவர்களைக் கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தப் போவதும் இல்லை. வரும் ஜனவரி 15-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உணவகங்கள் செல்ல முடியாது, திரையரங்குக்குள் நுழைய முடியாது.
தடுப்பூசி போடாதவர்களை இழிவு படுத்தப் போகிறேன். நான் அவர்களை தொந்தரவு செய்ய விரும்புகிறேன். கோப்படுத்த விரும்புகிறேன். இதுதான் இனி அரசின் கொள்கை. நாங்கள் அதை இறுதி வரை செய்வோம்” என்று கூறினார்.
பிரான்சில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மேக்ரானின் இந்த சர்ச்சை பேச்சு பல்வேறு தரப்பிலும் கண்டனங்களுக்கு வழிவகுத்துள்ளது.

Comments are closed.