தடுப்பூசி போட்ட ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலகக்கோப்பை இருபது ஓவர் தொடருக்கு பிறகு நியூசிலாந்து அணியானது இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. ஜெய்ப்பூரில் 8 ஆண்டுக்கு பிறகு நடக்கும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இதையொட்டி ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க செயலாளர் மகேந்திர ஷர்மா கூறுகையில், ‘இந்த போட்டியை ரசிகர்கள் நேரில் பார்க்க மாநில அரசிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளோம்.

அரசாங்கம் வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ரசிகர்கள் குறைந்தது கொரோனா தடுப்பூசி ஒரு டோஸாவது செலுத்தியிருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இல்லாவிட்டால் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்’ என்று கூறினார்.

Comments are closed.