தனியார் வகுப்புக்கள் குறித்து கல்வி அமைச்சர் முன்வைத்துள்ள விசேட யோசணை!

தனியார் வகுப்புக்களை கண்காணிக்க, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீறிஸ் தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் வகுப்புக்கள் குறித்து பல முறைப்பாடுகள் கல்வி அமைச்சுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அவற்றை கண்காணிக்க கல்வி அமைச்சுக்கு அதிகாரம் கிடையாது என்ற போதிலும்,  மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் கல்வி முறைமை குறித்து ஆராயும் பொறுப்பு, கல்வி அமைச்சுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக, தற்போது இணையவழியூடாக கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில். தனியார் வகுப்புக்களும் இடம்பெறுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில்,  தனியார் வகுப்புக்களில் அதிக கட்டணம் முறையற்ற விதத்தில் அறவிடப்பட்டுள்ளதாகவும், கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்கள், கற்றல் நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்ளப்படுவதில்லை எனவும் அமைச்சர் ஜி.எல் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையிலேயே, தனியார் வகுப்புக்களை கண்காணிக்க, கல்வியமைச்சுக்கு அதிகாரங்களை பெற்றுக் கொள்ள அமைச்சரவையில் யோசனை முன்வைக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் 50,000 ஆயிரம் தனியார் கல்வி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  தனியார் வகுப்புக்களில் சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் ஆசிரியர்களாக பணிபுரிவதாகவும், அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.