திடீரென வெடித்து சிதறும் எரிவாயு சிலிண்டர்கள்

அண்மைக்காலமாக நாட்டில் சிலிண்டர்களின் வெடிப்பு  சம்பவங்கள் அதிகமாக பதிவான நிலையில் எரிவாயு சிலிண்டர்களின் கலவை தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் தனியார் நிறுவனமும் எரிவாயு சிலிண்டர்களில் உள்ள எரிவாயு கலவையை ஆராய்ந்து வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

நாட்டில் லிட்ரோ கேஸ் நிறுவனத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் 350 மில்லியன் எரிவாயு சிலிண்டர்களில் ஐந்து அல்லது ஆறு விபத்துக்கள் மாத்திரமே பதிவாகியுள்ளது. அதேவேளை 2015 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்ட லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களில் 12 விபத்துக்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான விபத்துக்களின் நிகழ்தகவைக் குறைக்கும் நோக்கில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் எரிவாயு சிலிண்டர்களின் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கான வர்த்தமானிகளை வெளியிடுவது மற்றும் சட்டங்களை இயற்றுவது குறித்து ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை இம்மாதத்தில் மாத்திரம் 4 எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதனபடி பன்னிப்பிட்டிய – கொட்டாவ வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியது.

இதனால் வீட்டிலிருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. கடந்த 4 ஆம் திகதி வெலிகம – கப்பரதொட்ட பகுதியிலுள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர்.

இதேபோன்று கடந்த 16 ஆம் திகதி இரத்தினபுரி பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றது. பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சமையல் எரிவாயு கசிவே இதற்கான காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் கடந்த வாரம் (20 ஆம் திகதி) கொழும்பிலுள்ள குதிரை பந்தய திடலின் பார்வையாளர் கூடத்திற்கருகிலிருந்த உணவகத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளானதோடு , இந்த வெடிப்பு சம்பவத்திற்கும் சமையல் எரிவாயு கசிவே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.