துபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தல்

கினியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாவில் இருந்து இந்தியா சென்றார். இதற்காக அவர் முதலில் துபாய் வந்து பிறகு மற்றொரு விமானத்தில் டெல்லிக்கு சென்றார். கிறிஸ்துமஸ் தினத்தன்று துபாயில் இருந்து புறப்பட்டு டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கினார். அப்போது அந்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். இதில் அவரது பைகளில் ரூ.72 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 10 கிலோ எடையுள்ள கடத்தல் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கினியா நாட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணுக்கு இந்தியாவில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இண்டர்போல் போலீஸ் உதவியுடன் இந்த கடத்தல் சம்பவத்தில் அந்த பெண் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.