துமிந்த சில்வாவுக்கு ஏன் பொதுமன்னிப்பு வழங்கமுடியாது என, தேசிய சுதந்திர முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

பெருந்தொகையான ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டு, ஆயுள்சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊவதென்ன சுமண தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கமுடியுமாயின், நீதிபதிகளின் மீதான அழுத்தங்களால் வழங்கப்பட்ட தீர்ப்பின் ஊடாக சிறைவாசம் அனுபவித்துவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஏன் பொதுமன்னிப்பு வழங்கமுடியாது என, தேசிய சுதந்திர முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னணியின் கட்சி தலைமையகத்தில் நேற்று (06) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கேள்வியெழுப்பி, அதுவே தன்னுடைய கோரிக்கையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், ‘பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலி நாடாக்கள் மூலமாக, துமிந்த சில்வாவுக்கு எதிரான வழக்கின் போது, அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளமை உறுதியானது. அத்துடன், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையிலும், இவ்வழக்கின் போது நீதிபதிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது’ என்றார்.
ஆகையால், ஊவதென்ன சுமண தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதைப் போல, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கும் வழங்கவேண்டும் என விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்தார்.

Comments are closed.