தேவாலயங்களில் நள்ளிரவு ஆராதனைக்கு தடை
கேரளாவில் இதுவரை 70-க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கூட்டம் கூடுவதை தவிர்க்க இன்று (வியாழக்கிழமை) முதல் 2-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கை கேரள அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால் கூட்டம் கூடவோ, மத வழிபாடுகள் நடத்தவோ இரவு 10 மணிக்கு மேல் அனுமதி இல்லை.
இந்தநிலையில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு ஆராதனைக்கு அனுமதி அளிக்க கேரள கிறிஸ்தவ பேராயர்கள் கூட்டமைப்பு சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று கேரள அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது. இதனால் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கேரளாவில் புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் நள்ளிரவு ஆராதனை நடைபெறாது என அரசு தெரிவித்துள்ளது.