தொடரை கைப்பற்றி அயர்லாந்து அணி சாதனை

அயர்லாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டியில் விளையாடியது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகித்தது.

இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ்-அயர்லாந்து அணிகள் இடையேயான தொடரை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நேற்று முன்தினம் நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த அயர்லாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷாய் ஹோப், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்த ஷாய் ஹோப் 53 ரன்னில் (39 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) கிரேக் யங் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 11 ஓவர்களில் 72 ரன்னாக இருந்தது.

அதன் பிறகு வெஸ்ட்இண்டீஸ் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய ஜாசன் ஹோல்டர் 60 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார். வெஸ்ட்இண்டீஸ் அணி 44.4 ஓவர்களில் 212 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. கேப்டன் பொல்லார்ட் (3 ரன்), நிகோலஸ் பூரன் (2 ரன்) உள்ளிட்ட மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை. அயர்லாந்து அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஆன்டி மெக்பிரின் 4 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் கிரேக் யங் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர் வில்லியம் போர்ட்டர்லீல்டு (0) முதல்பந்திலேயே கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இருப்பினும் பொறுப்பு கேப்டன் பால் ஸ்டிர்லிங் (44 ரன்), ஆன்டி மெக்பிரின் (59 ரன்), ஹாரி டெக்டர் (52 ரன்) ஆகியோர் நல்ல பங்களிப்பை அளித்து அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். அவர்கள் ஆட்டம் இழந்த பிறகு விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தன. இறுதியில் கிரேக் யங் பவுண்டரி விளாசி அணி வெற்றி இலக்கை கடக்க வைத்தார்.

44.5 ஓவர்களில் அயர்லாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்க் அடைர் ஒரு ரன்னுடனும், கிரேக் யங் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் அகீல் ஹூசைன், ரோஸ்டன் சேஸ் தலா 3 விக்கெட் சாய்த்தனர். அயர்லாந்து அணி வீரர் ஆன்டி மெக்பிரின் (128 ரன்கள், 10 விக்கெட்) ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அத்துடன் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக வெளிநாட்டு மண்ணில் ஒருநாள் தொடரை அயர்லாந்து அணி முதல்முறையாக வென்று சாதனை படைத்தது.

Comments are closed.