தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் விரைவில் சாதகமான தீர்வுகள்: அமைச்சர் ரமேஷ் பத்திரன நம்பிக்கை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் விரைவில் சாதகமான தீர்வுகள் கிடைக்குமென்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

தொழில் அமைச்சின் கீழ் வரும் கடை, அலுவலக ஊழியர், பெண்களையும் இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல், குறைந்தபட்ச வேதனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் (திருத்தச்) சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று நிலைமையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பெருந்தோட்டத் துறையினர் ஏற்றுமதி வருமானத்திற்கு பெருமளவு பங்களித்து வருகின்றனர் . 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில் 10 -12 வீதத்தால் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது.

பெருந்தோட்டத் துறையினரின் சமூக நலன்புரி விடயங்கள் மற்றும் அவர்களின் நாளாந்த வருமானத்தை அதிகரித்தல் ஆகியன தொடர்பாக அரசாங்கம் தனது கொள்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

அவர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்காக நிமல் சிறிபால டி சில்வா நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். இது தொடர்பான சாதகமான தீர்வு கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம்.

பெருந்தோட்டத் துறையினருக்கு வருமானத்தை அதிகரிக்க தேவையான பின்னணி ஏற்படுத்தப்படுகின்றன.

பெருந்தோட்டங்களில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேறி வரும் நிலையில் அங்கு பணியாளர் பற்றாக்குறைகள் தோட்டங்களில் ஏற்பட்டுள்ளன. இது சம்பள அதிகரிப்பு விடயத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது. இதற்கு பொறிமுறையொன்றை தயாரிக்க வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களாகவே உற்பத்திகளை செய்து வருமானத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் மேட்கொள்ளப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.