தோனியிடம் ‘ஆட்டோகிராப்’ வாங்கிய டேல் ஸ்டெயின்

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற  46-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் -சென்னை அணிகள் மோதின.

தொடக்க வீரர்களின் அதிரடியால் ஐதராபாத் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. வழக்கமாக ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் இரு அணியின் வீரர்களும் மைதானத்தில் சில நேரம் போட்டி குறித்து ஆலோசனையில் ஈடுபடுவார்கள்.

சுவாரசியமான பல நிகழ்வுகளும் அந்த சமயத்தில் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டி முடிந்த பிறகு ஐதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ஸ்டெயின் சென்னை அணியின் கேப்டன் தோனியை சந்தித்தார்.

அப்போது ஸ்டெயின் தன்னுடைய பழைய ஜெர்சியை தோனியிடம் கொண்டு சென்று ஆட்டோகிராப் கேட்டார். அதற்கு தோனியும் நெகிழ்ச்சியுடன் ஆட்டோகிராப் போட்டார்.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 38-வயதான டேல் ஸ்டெயின் உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளராக விளங்கியவர். மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் ஸ்டம்புகளை தாக்கும் இவரது வேகம் பல முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துள்ளது.

இந்த நிலையில் அவரே தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது தோனி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Comments are closed.