நண்பரை கல்லால் அடித்துக்கொன்ற நபர்

மராட்டிய மாநிலம் மும்பையின் அந்தேரியில் உள்ள மொரோல் பகுதியை சேர்ந்தவர் ராகுல் கெய்குவாட். இவர் தான் பணிபுரியும் இடத்தில் வேலை செய்துவந்த சக ஊழியரான சுஷாந்த் கெய்குவாட் (22 வயது) என்பவருடன் நட்பு ரீதியில் பழகி வந்துள்ளார். மது குடிக்கும் பழக்கம் உடைய இருவரும் அவ்வப்போது ஒன்றாக இருந்து மது குடித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நண்பர்களான ராகுலும், சுஷாந்தும் ஒன்றாக மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, மது போதையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சுஷாந்த் அருகில் கிடந்த கல்லை கொண்டு ராகுல் முகத்தில் தொடர்ந்து தாக்கியுள்ளார்.
இந்த கொடூர தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் ராகுல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். நண்பனை கொலை செய்துவிட்டு தான் ராகுலை கொலை செய்துவிட்டதாக சுஷாந்த் தனது மற்றொரு நண்பனுக்கு செல்போனில் மெசெஜ் அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொல்லப்பட்ட ராகுலின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மது போதையில் நண்பனை கொன்றுவிட்டு தப்பியோடிய சுஷாந்தை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த சுஷாந்த் கெய்குவாட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுஷாந்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

Comments are closed.