நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை பணிகளுக்கு பாதிப்பு

17 சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள பெருமளவான வைத்தியசாலைகளின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகளுக்காக செல்லும் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி உள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வேதன உயர்வு உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்கு, அரசாங்கம் உறுதியளித்தவாறு தீர்வு வழங்கவில்லை எனத் தெரிவித்து, 17 சங்கங்கள் இணைந்து இன்று காலை 8 மணிக்கு இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.

இந்தப் பணிப்புறக்கணிப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தப் பணிப்புறக்கணிப்பானது, நோயாளர்களை பாதிப்புக்கு உள்ளாக்குவதற்காக அல்ல என்றும், தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க சுகாதார அமைச்சின் தலையீட்டை பெற்றுக்கொள்வதற்கானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், சுகாதார தொழிற்சங்கத்தினர், இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பின் பின்னர், பணிக்குத் திரும்புவார்கள் என்பதால், தாங்கள் அமைதியாக இருக்கலாம் என்ற கொள்கையில் சுகாதார அமைச்சு உள்ளது.
இதன் பிரதிபலன் மிகவும் மோசமானது.

10 நாட்களின் பின்னர் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும்.

இந்த அடையாள பணிப்புறக்கணிப்புக்கு தீர்வு வழங்குவதற்கான, இராஜதந்திரமோ அல்லது தொழில் ரீதியான தன்மையோ சுகாதார அமைச்சுக்கு இல்லை என சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், நீதிமன்றத் தடை உத்தரவு காரணமாக, இந்தப் பணிப்புறக்கணிப்பில் அரச தாதியர் சங்கம் பங்கேற்கவில்லை என அதன் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

எனினும், பணிப்புறக்கணிப்புக்கு அப்பாற்சென்ற இணக்கப்பாட்டு நடவடிக்கையில் தாங்கள் பங்குகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுவரையில் சுமார் 600 வைத்தியசாலைகளிலும், 293 பொது சுகாதார பரிசோதகர் பணிமனைகளிலும் இந்தப் பணிப்புறக்கணிப்பு இடம்பெறுவதாகவும் அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

Comments are closed.