நாட்டில் கொரோனா வைரஸை பரவச்செய்வதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு!

நாட்டில் மேலும் கொரோனா வைரஸை பரவச்செய்வதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார்.

கொரோனா தடுப்பு மருந்தினைப் பெற்றுக்கொள்வதற்கான முறையான நடவடிக்கைகள், இதுவரை மேற்கொள்ளப்படாமையே இதற்குக் காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகள் தமது மக்களுக்கு கொவிட் – 19 தடுப்புமருந்தைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களைப் பின்பற்றி வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.

அத்துடன், இஸ்ரேல் அரசாங்கம், தமது நாட்டு சனத்தொகையில் 10 சதவீதமானோருக்கு தடுப்புமருந்தை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இலங்கையில் இதுவரை அவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தற்போதைய நிலைமையில், தமது தனிப்பட்ட நலன்களை நிறைவேற்றிக்கொள்வது  குறித்தே, அரசாங்கம் கவனம்செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர, விமானப்பயணச்சீட்டு, தங்குவதற்கான விடுதிகளின் கட்டணம் என்பன உயர்த்தப்பட்டுள்ளதாகவும்,  நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் கூறியுள்ளார்.

Comments are closed.