படகு கவிழ்ந்து 6 பேர் பலி
பிரேசிலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மேட்டோ கிராஸ்சோ மாகாணத்தில் தென் அமெரிக்காவின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான பராகுவே ஆறு ஓடுகிறது. மேட்டோ கிராஸ்சோ வரும் சுற்றுலா பயணிகள் பராகுவே ஆற்றில் படகு சவாரி செய்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் 21 சுற்றுலா பயணிகள் பராகுவே ஆற்றில் படகு சவாரிக்கு சென்றனர். ஆற்றின் நடுப்பகுதியில் படகு சென்று கொண்டிருந்தபோது அங்கு பலத்த காற்று வீசியது. மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக கூறப்படுகிறது.
இதில் நிலைதடுமாறிய படகு ஆற்றில் கவிழ்ந்து மூழ்கியது. படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
எனினும் 14 பேர் தாமாகவே நீந்தி கரை சேர்ந்தனர். மேலும் இந்த விபத்தில் ஒருவர் மாயமானார். அவரின் கதி என்ன என்பது தெரியவில்லை.