பதுளை மாவட்டத்தின் 18 பாடசாலைகளில் ஒரு மாணவர் கூட வருகைத்தராத நிலை!
பதுளை மாவட்டத்தில் ரிதிமாலியத்தை மற்றும் மகியங்கனை ஆகிய பகுதிகளில் கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக பாடசாலையில் மாணவர்களின் வரவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ரிதிமாலியத்தை கல்வி வலயத்தின் 18 பாடசாலைகளில் எந்தவொரு மாணவரும் தற்போதைய நிலையில் சமூகமளிக்கவில்லையென ஊவா மாகாண கல்விப்பணிப்பாளர் டி.எம்.ரட்னாயக்க தெரிவித்தார்.
மேற்படி பாடசாலைகளின் பெரும்பாலான ஆசிரியர்கள் மட்டும் சமூகமளித்திருந்தனர்.
ரிதிமாலியத்தை கல்வி வலயத்தின் ரிதிமாலியத்தை, ஆந்தாவுல்பொத்த, ஈட்டிகாராவை, குருவிதென்ன, ஊரணி, மகாகம, குருமட, கல்பொக்க, கெசல்பொத்தை, நாகதீப, திக்கல்யாய, திஸ்ஸபுர, ஊவாதிஸ்ஸபுர, தர்மபால, அராவத்தை, குடானுக்க, மாப்பாகட,அராவ ஆகிய 18 பாடசாலைகளிலும் மாணவர்கள் எவரும் சமூகமளிக்கவில்லை.
இம்மாணவர்களில் பெரும்பாலானோர் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 அச்சம் காரணமாக இரு ஆடைத்தொழிற்சாலைகள் ரிதிமாலியத்தை மற்றும் மகியங்கனை ஆகிய இடங்களில் மூடப்பட்டுள்ளன. ஆடைத்தொழிற்சாலைகளில் வேலை செய்தவர்கள் பலரும் தமது வீடுகளிலேயே இருந்து வருகின்றனர்.
இவர்களில் 197 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் தற்சமயம் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.