பத்சிராய் சூறாவளிக்கு பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு

மடகாஸ்கர் நாட்டின் வடக்கே மனன்ஜாரி நகரில் இருந்து 14 கி.மீ. தொலைவில் மற்றும் தலைநகர் அன்டனானரிவோவில் இருந்து 535 கி.மீ. தென்கிழக்கே, கடந்த 5ந்தேதி (சனிக்கிழமை) மாலையில் பத்சிராய் என்ற சூறாவளி தாக்கியது.

அந்நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி சூறாவளி கடந்து சென்றது.  இதனை தொடர்ந்து, அந்த பகுதி மக்களை மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.  சூறாவளி அந்நாட்டை தாக்கியதில் கனமழை, நிலச்சரிவு மற்றும் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஆகியவை ஏற்பட்டு உள்ளது.  1.5 லட்சம் பேர் இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்றிருக்க கூடும் என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

சூறாவளியால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் வீடுகள் அடித்து செல்லப்பட்டதுடன் குடிமக்களின் சொத்துகள் பெரிய அளவில் பாதிப்படைந்து உள்ளன.  பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன.  பலர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.  இதுதவிர, மக்களின் வருவாய்க்கான அடிப்படை வளங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் மடகாஸ்கரில் சூறாவளி பாதிப்புக்கு மொத்தம் 111 பேர் வரை உயிரிழந்து உள்ளனர் என்று மடகாஸ்கர் பேரிடர் மேலாண் அலுவலகம் தெரிவித்து உள்ளது.  அவர்களில் 87 பேர் தென்கிழக்கே பிதோவினானி பகுதியில் இகோங்கோ மாவட்டத்தில் வசித்தவர்கள் ஆவர்.

இந்த பகுதி மலைப்பிரதேசம் என்பதனால், கனமழை பெய்யும்போது நிலச்சரிவுகள் போன்றவை ஏற்படும் ஆபத்துகள் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments are closed.